மேலூரை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் 17 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைதொடர்ந்து காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் நாகூர் ஹனிபா என்பவரை சிறுமி காதலித்து வந்ததாகவும் அவருடன் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி விசாரணையை தொடர்ந்ததில், நாகூர் ஹனிபா தான் சிறுமியை முதலில் மதுரையில் இருந்த நண்பர் வீட்டுக்கும், ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றதும் உறுதியானது. அதன்பிறகு இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். ஆனால் நாகூர் ஹனிபா அதை சாப்பிடாமல் வெளியில் துப்பியுள்ளார். ஆனால் சிறுமி சிறிதளவு எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அச்சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் எலி மருந்தை சாப்பிட்டதை சொல்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது.
அதையடுத்து நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் சிறுமியை அவரது தாயாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்து சென்றுள்ளனர். பின்னர் சிறுமியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுமி காணாமல் போன வழக்கை, போக்சோ வழக்காக மாற்றப்பட்டதாகவும், நாகூர் ஹனிபாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மதினா பேகம் நண்பர், உறவினர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.