tamilnadu

img

வீட்டுமனை, பட்டா கேட்டு 20 ஆயிரம் பேர் ஆட்சியரிடம் மனு!

மதுரை, அக். 7 -  மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவசப் பட்டா மற்றும் வீட்டுமனை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பெருந்திரள் முறையீடு செய்யப்பட்டது.

ஆண்கள் - பெண்கள் என பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த பெருந்திரள் முறையீடு இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரைத்  தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் தலைமைவகித்தார். பெருந்திரள் முறையீட்டிற்கு முன்னதாக, மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற ஊர்வலத்தை - மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் துவக்கி வைத்தார்.

கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மாநகர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய்,  எஸ். பாலா, துணை மேயர் தி. நாகராஜன் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

‘மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு எதிரான அரசாணையை மாற்ற வேண்டும்!’

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சு. வெங்கடேசன் எம்.பி., அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, கடந்த மாதம் மதுரை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும், மதுரை புறநகர் பகுதியில் 12 ஆயிரத்து 233 பேருக்கு பட்டா வழங்கியதை பாராட்டினார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது, தமிழகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வு என்றும், இதற்காக அன்றைய தினமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

அதே நேரத்தில், மதுரை மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 30 லட்சம் மக்கள் தொகையில், 15 லட்சம் பேர் மாநகராட்சிப் பகுதியில் வசிப்பதாகவும், அவர்கள் பட்டா பெற முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார். கடந்த மாதம் புறநகர் பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்பட்டதால் மாநகர் பகுதி மக்களிடையேயும் பட்டா தொடர்பான பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது; அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ஏற்பட்ட கோபம் இன்றைய பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் திரளச் செய்துள்ளது என்றார்.

குறிப்பாக, மதுரை மாநகராட்சிக்குள் நான்கு வகையான பிரச்சனைகள் உள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி., சுட்டிக்காட்டினார்:

1. மாநகராட்சிப் பகுதிக்குள் அரசு நத்தம் புறம்போக்கில் பல பத்தாண்டுகளாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிப்பதாகவும், அவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

2. மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்ற பழைய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றார். இது மக்கள் விரோத அரசாணை என்றும், மாநகராட்சிக்குள் வசிப்பவர்களுக்கும் அனைத்துச் சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

3. 2011-இல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அனுமந்தப் பட்டாக்களை தோராயப் பட்டாக்களாக மாற்றி, கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.

4. குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் பணம் கட்டியும் பட்டா பெற முடியாத 6 ஆயிரம் பேருக்கு உடனடியாக பத்திரம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும், மாநகராட்சி பகுதிக்குள் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள ஏழைகளுக்கு பொருத்தமான இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும், நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புவதாகவும் வெங்கடேசன் எம்.பி., தெரிவித்தார். மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு எதிரான அரசாணையை மாற்றி, மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், இது மதுரை மக்களின் 40-50 ஆண்டுகால கனவு என்றும் அவர் குறிப்பிட்டார்.