139-ஆவது மே தினம் எழுச்சிக் கொண்டாட்டம்
உலகத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் திருநாளான ‘மே’ நாள், வியாழனன்று (மே 1) உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான நகரங்களில் இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் 139-ஆவது மே நாளை உற்சாகத்துடன் கொண்டாடின. ‘உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருவோம்; எதிர்காலம் சோசலிசத்திற்கே; புரட்சி வெல்லட்டும்’ என்ற முழக்கங்களை எழுப்பி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் - பொதுக்கூட்டங்களை நடத்தினர். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மையங்களில் கொடியேற்று விழா, ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில-மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
சிபிஎம் மத்தியக்குழு அலுவலகத்தில் மே தின விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, செங்கொடியை ஏற்றிவைத்தார். மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், ஹன்னன் முல்லா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி.வி. ராகவலு, தபன் சென், டாக்டர் விஜூ கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.முரளிதரன், ஏ.ஆர். சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில், கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மே தினக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ. ராஜசேகரன், ஏ.வி. சிங்காரவேலன், தோ. வில்சன், ஆர். சுதிர், க. சரவணன் மற்றும் மாநிலக்குழு அலுவலக ஊழியர்கள் மே தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆர். நல்லகண்ணு செங்கொடியை ஏற்றிவைத்தார்
139-ஆவது மே தின செங்கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு ஏற்றினார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் மு. வீரபாண்டியன், நா. பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழ்வெண்மணி தியாகிகளுக்கு பெ. சண்முகம் செவ்வணக்கம்
உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தினமான மே தினத்தில், வர்க்கப் போராட்டத்தின் சின்னமாக விளங்கும்- தியாக பூமி வீரவெண்மணியில், தியாகிகளின் நினைவுத் தூணுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மலர்மாலை வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் வி.பி. நாகை மாலி எம்எல்ஏ, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் - மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிஐடியு அலுவலகத்தில் மே தின கொடியேற்றம்
சென்னையிலுள்ள சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் 139-ஆவது மே தின செங்கொடியை. துணைப் பொதுச்செயலாளர் வி. குமார் ஏற்றிவைத்தார்.