‘ஊடுருவலை சகித்துக் கொள்ள மாட்டோம்’
பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் திட்டவட்டம்
துதில்லி, மே 11- ‘ஊடுருவலை சகித்துக் கொள்ள மாட்டோம்’என பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே, கடந்த சனிக்கிழமையன்று சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்த உடன்பாடு அமலுக்கு வந்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். அதனையே இருநாட்டு ராணுவ தலைமை இயக்குநரக அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். எனினும், உடன்பாட்டை மீறி இரவில் பாகிஸ்தான் படைகள் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய படைகளும் பதிலடி கொடுத்தன. இது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் ராஜீய மட்டத்திலான தலையீட்டிற்குப் பிறகு அன்றிரவு 11 மணிக்குப் பிறகு, எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. ஞாயிற்றுக்கிழமை முழுமையாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், துப்பாக்கிச்சூடு, டிரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. எல்லைப்பகுதி மாநிலங்களில் மின்தடை எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அமைதியான சூழலே நிலவுகிறது என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ தெரிவித்தது. பாகிஸ்தானுடன் 553 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. பேச்சுவார்த்தை இதையடுத்து, “இரு நாடுகளின் தளபதிகளும் மே 12 அன்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஏற்கெனவே அறிவித்திருந்த படி, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளின் ராணுவத் தலைமை இயக்குநரகங்களின் உயர் அதிகாரிகள் முழுமையான தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை திங்களன்று நடத்தினர். இதில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் தலைமை இயக்குநர் (Director General of Military Operations - DGMO) ராஜீவ் கய், பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ- மேஜர் ஜெனரல் காஷிப் அப்துல்லா ஆகியோர் ஹாட்லைன் மூலம் தொலைபேசி உரையாடல் நிகழ்த்தினர். இந்த உரையாடலின் போது, எல்லையில் நிகழும் ஊடுருவல்களுக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை குறித்து பாகிஸ்தான் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. அதே போல ஊடுருவல்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும்; டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதோ அல்லது போதைப் பொருட்களை கடத்துவதோ கூடாது ; எல்லையில் அமைதி நிலவ பாகிஸ்தான் ராணுவம் ஒத்துழைக்க வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கக் கூடாது என உரையாடலில் இந்திய ராணுவம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. டிஜிஎம்ஓ மட்டுமே! மேலும் இனிமேல் இந்தியா - பாகிஸ்தான் இடையே டிஜிஎம்ஓக்கள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது. 3ஆவது தரப்பின் மத்தியஸ்தம் ஏற்கப்படாது என பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா - பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனைக்கு ஐநா பாதுகாப்பு அவை தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வு இருக்க வேண்டும் என பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இந்தியா உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.