‘சாதிவாரி கணக்கெடுப்போடு சமூக பொருளாதார நிலையையும் கணக்கெடுக்க வேண்டும்’
சிபிஎம் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை, மே 1 - மக்கள் தொகை கணக் கெடுப்புடன் சாதிவாரி கணக் கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த உள்ளது. சாதிவாரி கணக் கெடுப்போடு சமூக பொருளாதார நிலையையும் கணக்கெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. 139வது மே தின செங்கொடியை கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சாதி, மதம், இனம், மொழி கடந்து மே தினத்தை அனைவரும் கொண்டாடு கின்றனர். இந்திய தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக இயக்கங்களும் பல சவால்களை எதிர்கொண்டு போராட உறுதியேற்கும் நாளாக மே தினத்தை கொண்டாடுகின்றன.
மறுபரிசீலனை தேவை
பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் பலியாகினர். ஒன்றிய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில், பயங்கரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்ய இச்சம்பவத்தை பயன் படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவாக காஷ்மீர் மக்கள்தான் இருந்தனர். சிந்துநதி நீரை பயன்படுத்தி பாகிஸ்தானில் 4.50 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. 70 சதவீத மக்களின் குடிநீர் தேவையை சிந்து நதி நீர் பூர்த்தி செய்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்; அதேநேரத்தில், சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு தர மாட்டோம் என்ற முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2021 நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை வரவேற் கிறோம். சாதி வாரியாக எவ்வளவு மக்கள் உள்ளனர் என்பதை மட்டும் கணக்கெடுக்காமல் அவர்களின் சமூக பொருளாதார நிலையையும் கணக்கெடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிக வரி விதித்துள்ளார். இதனால் உலக பொருளாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப் படும். எனவே, வரி உயர்வை எதிர்த்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மே 20 வேலைநிறுத்தம்
29 தொழிலாளர் சட்டங்களை திருத்தி 4 தொழிலாளர் தொகுப்புகளாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் களுக்கு விரோதமான இந்த நடவடிக்கையை கண்டித்து மே 20 அன்று தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அதனை சிபிஎம் ஆதரிக்கிறது. தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கப் பதிவுக்காக போராடினர். இதற்காக 25 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்தது. பதிவு செய்யப்பட்ட சங்கம் உள்ள நிலையில் போட்டிக்குழுவை உருவாக்கி ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை அறிவித்துள்ள னர். இது தொழிலாளர் விரோத நட வடிக்கை. சாம்சங் விவகாரத்தில் தொழி லாளர் துறை சரியாக நடந்து கொள்ள வில்லை. தொழிலாளர் ஆணையர் கட்டப் பஞ்சாயத்து போன்று செயல்பட்டுள்ளார். இதில் அரசு தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.