லக்னோ:
மஹோபா மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கூட்டுசேர்ந்து, இந்திரகாந்த் திரிபாதி என்ற வர்த்தகரை பணம் கேட்டு மிரட்டியதும், அந்த வர்த்தகர் தற்போது இறந்திருப்பதும் உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; கோவிட்-19 உபகரணம் வாங்குவதில்கூட மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடக்கிறது என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
“மஹோபாவில் இந்திரகாந்த் திரிபாதி என்ற வர்த்தகர் இருந்தார். இவரிடம் மாவட்ட எஸ்.பி.யும் மாவட்ட ஆட்சியரும் எப்படி மிரட்டி ரூ. 5 லட்சம் கேட்டனர் என்பதற்கான குரல் பதிவு என்னிடம் உள்ளது. திரிபாதி பணத்தைக் கொடுக்க முடியாது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய போது, எஸ்.பி. அவரை கொலை செய்வதாக மிரட்டுகிறார்.பயந்து போன வர்த்தகர் திரிபாதி, தான்கொலையாவதற்கு ஒரு வாரம் முன்னதாகவீடியோ வெளியிட்டார். அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது திரிபாதி இறந்துள்ளார்” என்று சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை வர்த்தகர் கொலை தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சஞ்சய் சிங், முதல்வர் நாற்காலியில் தொடர ஆதித்யநாத்துக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை; அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.