tamilnadu

img

பாதிக்கப்பட்ட மாணவியையே கைது செய்த உ.பி. பாஜக அரசு!

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சின்மயானந்தா (72), தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக, ஷாஜகான்பூர் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி (23) ஒருவர் அண்மையில் பரபரப்புக் குற்றச்சாட்டு எழுப்பினார். இதுதொடர்பாக சுமார் 11 மணி நேரம், சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்த மாணவி, 43 வீடியோ ஆதாரங்களையும் ஒப்படைத்தார். இவ்வளவு ஆதாரங்களை அளித்த பிறகும், உ.பி. பாஜக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், சின்மயானந்தாவைக் கைது செய்யவில்லை. இதனால் விரக்தியடைந்த மாணவி, ஒருகட் டத்தில் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். 

இதையடுத்து சின்மயானந்தாவை செப்டம்பர் 20-ஆம் தேதி கைது செய்த உ.பி. பாஜக அரசு, தற்போது புகார் கொடுத்த மாணவியையும், அவரது நண்பர்களையும் கைது செய்து, அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது, சின்மயானந்தாவிடம் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக இரண்டு நாட்களுக்கே முன்பே, மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை மாணவி உறுதிபட மறுத்தார். “நான் 5 கோடி ரூபாய் கேட்டேன் என்று சின்மயானந்தாவின் வழக்கறிஞர் கூறுகிறார்; அது சுத்தப் பொய்; அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கூறினார். எனினும், முன்னெச்சரிக்கை அடிப்படையில், ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவும் தாக்கல்செய்தார். இந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமையன்று இரவு, மாணவியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சிறப்புப் புலனாய்வுக்குழுவினர், புதன்கிழமையன்று காலை அவரைக் கைது செய்து, நீதிமன்ற ஆஜர்படுத்துதலுக்குப் பிறகு, சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வழக்கில், முக்கியக் குற்றவாளியான சாமியார் சின்மயானந்தா, 2 நாள் மட்டுமே சிறையில் இருந்தார். தற்போது நெஞ்சுவலி என்ற பெயரில் லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சின்மயானந்தாவை காப்பாற்றும் விதமாக, அவர்மீது பாலியல் வல்லுறவு வழக்கு பதிவுசெய்யப்படாமல், அதிகாரம் செலுத்தி உறவு வைத்துக்கொண்டார் (IPC 376C) என்று மட்டுமே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் 354 னு (பின்தொடருதல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்) 506 (கிரிமினல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், சின்மயானந்தாவால் பாதிக்கப்பட்ட மாணவி, அவசர அவசரமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவியின் நண்பர்களான சஞ்சய், சச்சின், விக்ரம் ஆகிய 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.