tamilnadu

img

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு... காவல் ஆய்வாளருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது..

மதுரை:
சாத்தான்குளம் காவல்துறையினரால்  தந்தை-மகன் கொல்லபட்ட விவகாரத்தில் சிறையிலிருக்கும்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில்,” சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  கைதுசெய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாகமாட்டேன். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என உறுதி கூறுகிறேன். இந்த வழக்கில்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,” சம்பவம் நிகழ்ந்த அன்று கொரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சிபிஐ எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்தே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான  விசாரணைக் குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும்
இந்த வழக்கை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்தார்.