முசாபர்நகர்:
இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனொரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் காசியாபாத் நகரில் இருந்து முசாபர்நகர் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் போன்று உடை அணிந்து இருந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்ததில் அவர்கள் புதுமண தம்பதி என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த தம்பதியின் உறவினர்கள் ஏழு பேர் உட்பட ஒன்பது பேரும் கட்டாளி பகுதியில் உள்ள அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுமண தம்பதியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.