ராஞ்சி:
ஜார்க்கண்டில் தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு பெற்றோர் வலியுறுத்தியதால் புலம்பெயர்ந்த தொழிலாளி உயிரை மாய்த்துக்கொண்டார்.மகாராஷ்டிரா மாநிலம் ஷோலாப்பூரி லிருந்து திரும்பி வந்த 19 வயது நிரம்பிய முகேஷ்குமார் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்டின் பன்வரியில் உள்ள தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மரத்தில்தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
அவரது பெற்றோர்கள் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்குச் செல்லுமாறு வற்புறுத்தியதால் இந்த விபரீதம் நடந்துள்ளது.முகேஷ்குமார் ஷோலப்பூரில் ஒரு இரும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கால் வேலையில்லாத நிலையில் அவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.மகனின் மரணம் குறித்து அவரது தந்தை நாராயணன் கௌடு கூறுகையில், தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கூறியதால் எனது மகன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து என் மனைவி மகனைத்தேடி வெளியே சென்றார் அவர் எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஒரு மரத்தில் தொங்குவதைக் கண்டார் என்றார்.