மதுரை:
குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோரை குரூப்-2 தேர்வு முறைகேடுகுறித்து விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் புதனன்று மதுரைக்கு அழைத்துவந்து அவர்களை மதுரை-மேலூர் நான்குவழிச்சாலையில் யா.ஒத்தக்கடை அருகே வைத்து விசாரணை நடத்தினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்தாண்டு நடத்திய தொகுதி-4 தேர்வில் இராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 40 பேர் இந்த இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். இதனால் தேர்வில் முறைகேடு நடந்ததாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்ததுஉண்மையென தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இது தொடர்பாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் புகாரைக் கையிலெடுத்த சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாணையப் பணியாளர் ஓம்காந்தன், சென்னையைச் சேர்ந்த புரோக்கர் ஜெயக்குமார், தேர்வில் முறைகேடாக வெற்றிபெற உதவிய காவலர் சித்தாண்டி மற்றும் தேர்வில்முறைகேடு செய்து வெற்றி பெற்ற பல்வேறு நபர்கள்எனப் பலரையும் கைது செய்து வருகின்றனர். கைது படலம் தொடரும் எனக்கூறப்படுகிறது.
குரூப்-4 தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாளை சென்னைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஓம்காந்தனின் உதவியுடன் புரோக்கர் ஜெயக்குமார் மாற்றியது தெரியவந்தது. மேலும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், விரைவாக அழிந்து விடும் மையைக் கொண்ட பேனாவைப் பயன்படுத்தியதும், இந்த பேனாக்களை ஜெயக்குமார் அந்தத் தேர்வர்களுக்கு வழங்கியதும் தெரியவந்தது. விடைத்தாள்களை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புரோக்கர் ஜெயக்குமார் தேர்வு நாளுக்கு முன்னதாகவே இராமேஸ்வரத்தில் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்தேர்விலும் ஓம்காந்தனுக்கும், ஜெயக்குமாருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகவும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். கடந்த முறை குரூப்-4 தேர்விற்காக ஜெயக்குமாரை அழைத்து வந்து மதுரையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் குரூப்-2 முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக ஓம்காந்தனையும், ஜெயக்குமாரையும் சிபிசிஐடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் புதனன்று மதுரைக்கு அழைத்து வந்து மதுரை- மேலூர்நான்குவழிச் சாலையில் வைத்து விசாரணை நடத்தி அதை வீடியோ பதிவு செய்துகொண்டனர்.வரைபடங்களுடன் குறிப்பு எடுத்துக் கொண்டனர்.