போபால்:
வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் பாஜக-வைச் சேர்ந்த பிரகலாத் லோதி, எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலம் ராய்பூராநகரில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை அப் பகுதி வட்டாட்சியர் ஆர்.கே. வர்மா மடக்கிப் பிடித்தார். அப்போது அங்குவந்த பவாய் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரகலாத் லோதியும், பாஜக-வினரும், மணல் கடத்தலைத் தடுப் பதா? என்று கூறி வட்டாட்சியர் வர்மாவைக் கடுமையாக தாக்கினர். இதில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவிற்கு ஆர்.கே. வர்மா படுகாயம் அடைந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக, எம்எல்ஏ பிரகலாத் லோதி உட்பட 12 பாஜகவினர் மீது, ‘வன்முறையில் ஈடுபட்டது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அமைதிக்கு பங்கம்விளைவித்தது’ ஆகிய பிரிவுகளில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.5 ஆண்டுகளுக்குப் பின், நவம்பர் 2-ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய போபால் நீதிமன்றம், எம்எல்ஏ பிரகலாத் லோதி மற்றும் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைமற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன்படி, எம்எல்ஏ ஒருவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்துவிடுவார். அந்த வகையில் லோதி, அவரது எம்எல்ஏ பதவியை இழந்து விட்டதாகவும், பவாய் தொகுதி காலியாக உள்ளதாகவும் மத்தியப்பிரதேச சபாநாயகர் என்.பி. பிரஜாபதி அறிவித்துள்ளார்.