சியோல்
வட கொரிய நாட்டின் கம்யூனிச தலைவரும், அந்நாட்டின் ஜனாதிபதியுமான கிம் ஜாங் உன் உடல் நிலை பற்றிக் கடந்த ஒருவார காலமாகத் தவறான செய்திகள் வெளியாகி வந்தன. வடகொரிய நாட்டின் முக்கிய வில்லனான அமெரிக்காவும் கிம் ஜாங் உடல்நிலை பற்றி சில ஆதாரமில்லா தகவல்களை வெளியிட்டது. குறிப்பாக கிம் ஜாங் உடல்நிலை பற்றிய வதந்திக்கு அமெரிக்கா தான் முக்கிய காரணமாக இருந்தது. ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று ஒருபடி மேலே சென்று கிம் ஜாங் இறந்துவிட்டதாகத் தெரிவித்தது.
துடிப்புக்கும், தைரியத்திற்கும் பெயர் பெற்ற கிம் ஜாங் உன்-னின் உடல்நிலை பற்றிய ஆதாரமற்ற தகவல்கள் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திருந்த நிலையில், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் மருத்துவக்குழுவுடன் தங்கள் நாட்டு உயரதிகாரிகளைக் கொண்ட குழுவை வடகொரியாவுக்கு அனுப்பியது.
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நலமாக உள்ளதாகத் தென் கொரிய ஜனாதிபதியின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் விரிவாகக் கூறியதாவது," கிம் ஜாங் உன் உயிருடன் நலமாக இருக்கிறார். வட கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான வொன்சனில் அவர் தங்கியுள்ளார். ஏப்ரல் 13 முதல் இன்று வரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் புதிதாகக் கண்டறியப்படவில்லை எனவும், நாங்கள் கூறும் (தென் கொரியா) தகவல் உறுதியானது என்றும்" அவர் கூறியுள்ளார்.
கடந்த ஒருவார காலமாக வடகொரியா தலைவரின் உடல்நிலை குறித்த புரளிக்குத் தென் கொரியா முற்றுப்புள்ளி வைத்தது.