tamilnadu

img

மத அடிப்படையிலான குடியுரிமை பல லட்சம் பேரை அகதிகளாக்கும்...சிஏஏவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்ப்பு

லண்டன்:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள, மத அடிப்படையிலான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாதி - மத வித்தியாசமின்றி, அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர்.மோடி அரசோ, அதனை தனது அதிகாரத்தின் மூலம் ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில்தான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு வேறொரு வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரிட்டன்,ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போலந்துஉள்ளிட்ட 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பு, ‘இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், பலலட்சம் மக்களை அகதிகளாக மாற்றும்’என்று கடுமையாக கூறியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும் ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.ஏற்கெனவே பல உலக நாடுகள் சிஏஏ-வுக்கு எதிராக கருத்து கூறியிருந்தாலும், 28 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பிடமிருந்து எழுந்துள்ள எதிர்ப்பு மோடி அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஐந்து பக்கங்களில் 6 முக்கியஅம்சங்களைக் கொண்ட தீர்மானத்தைஐரோப்பிய எம்.பி.க்கள் தயாரித்துள்ளனர். “இந்தியா சர்வதேச ஐ.நா. விதிகளை மீறியுள்ளது. உலகில் அனைவருமே குடியுரிமை பெறுவதற்கு உரிமைஉள்ளது. மதத்தைக் காரணம் காட்டிகுடியுரிமையை ரத்து செய்யக் கூடாது.குடியுரிமையைத் தேர்வு செய்வது என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதில்அரசு தலையிட முடியாது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் அவையே கண்டித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவிற்கு எதிராக ஐரோப்பாசெயல்பட வேண்டும்” என்று தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.மேலும், “இந்தியாவில் சிறுபான்மையினர் தற்போது மோசமாக நடத்தப்படுகிறார்கள்; எதிர்ப்பவர்களின் குரல்கள் மொத்தமாக ஒடுக்கப்படுகின்றன; மனிதஉரிமை அமைப்புகள் மவுனிக்கச் செய் யப்படுகின்றன; பத்திரிக்கையாளர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை; இதற்குஎதிராக ஐரோப்பா குரல் கொடுக்க வேண்டும்; இதுதொடர்பாக சர்வதேச நடவடிக்கைகளை ஐரோப்பா எடுக்க வேண் டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனில் உள்ள 751 எம்.பி.க்களில் மொத்தம் 600 எம்.பி.க்கள்இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளனர். ஆளும் கட்சிகள் - எதிர்க்கட்சிகள் என்ற வித்தியாசமன்றி, அனைத்துக் கட்சிகளும் சிஏஏ-வை எதிர்த்துள்ளன.

ஐரோப்பாவின் மிக முக்கியக் கட்சியான சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் முற்போக்கு கூட்டணிதான்சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இக்கூட்டணிக்கு மொத்தம் 182 எம்.பி.க்கள் உள்ளனர். ஐரோப்பிய யுனைடெட் லெப்ட், நோர்டிக்கிரீன் லெப்ட் கட்சிகள் தீர்மானத்தை ஆதரிக்கின்றன. இவர்களுக்கு 41 எம்.பி.க்கள்உள்ளனர். மேலும் கிரீன்ஸ் - ஐரோப்பாபிரீ லைன்ஸ் கட்சியும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இவர்களுக்கு 75 எம்.பி.க்கள் உள்ளனர். ஆச்சரியப்படத்தக்க வகையில், பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் கூட்டணியும் சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கட்சிக்கு 66 எம்.பி.க்கள் உள்ளனர். மேலும் ரினீவ் ஐரோப்பா குரூப்பை சேர்ந்த 108 எம்.பி.க்களும் சிஏஏ-வுக்குஎதிரான தீர்மானத்தை ஆதரிக்கின்றனர். 

ஐரோப்பிய யூனியனில் அடுத்தவாரம் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அது நிறைவேறும் பட்சத்தில், ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கும்; இது சிஏஏ விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியைக் கொடுக்கும் என்றுபார்க்கப்படுகிறது.இதனிடையே ஐரோப்பிய கூட்டமைப்பின் முடிவுக்கு, இந்தியா கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எந்தவொரு முடிவுக்கும் வரும் முன்னர் தங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும், அந்தச் சட்டம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் இந்தியா சார்பில் எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அந்தச் சட்டம் எந்த மதத்தையும் சிறுமைப்படுத்துவது அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.