கிருஷ்ணகிரி, ஜூலை 25- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் ராமாபுரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 45 குடும்பத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அஞ்செட்டி பிரதான சாலைக்கு வருவதற்கான பாதையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதால் அந்த பகுதி மக்கள் பாதையில்லாமல் அவதிப்படுகின்றனர். சித்தாண்டபுரத்தில் வசிக்கும் பெறமன் 1963இல் சேலத்தான் என்பவரிடம் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி இதுநாள் வரை காட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் 5 மகன்களின் பிள்ளைகளுடன் 22 பேர் வாரிசுகளாக உள்ளனர். இந்நிலையில் ஊர்காவல் படையில் உள்ள மகேந்திரன் என்பவர் தலைமையில் எழுபேர் பெறமனின் நிலத்தை ஜேசிபி மூலம் சமப்படுத்தியுள்ளனர். அதை தட்டிக்கேட்ட பெறமனுடன் தகராறு செய்து, “விளையாட்டு மைதானம் அமைக்கப் போகிறோம் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’’ என மிரட்டி வருகின்றனர். சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் தயாராக இருக்கும் நிலையில் தனியார் ஆக்கிரமிப்பாளர்கள் சாலைக்கான நிலத்தை எடுப்பதை தடுத்து வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சனையில் வட்டாட்சியர் தலையிட்டு பெறமனின் நிலத்தை ஊர்காவல் படை மகேந்திரன், சக்திசெல்வன் உட்பட 7 பேரிடமிருந்து மீட்டுத்தர வேண்டும். வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்செட்டி வட்டாட்சியரிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செயலாளர் தேவராஜ், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் காவேரி ஆகியோர் மனு அளித்தனர்.