கொல்கத்தா
ஆசியாவின் புதிய கொரோனா மையமாக முளைத்துள்ள இந்தியாவில் இன்னும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மூன்று கட்ட ஊரடங்கு விதிக்கப்பட்ட பொழுதிலும் கொரோனா பரவல் ராக்கெட் வேகத்தில் தான் உள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு 4-ஆம் கட்ட ஊரடங்கு தொடங்கும் செயல்படுத்தும் முன்னைப்பில் உள்ளது. இந்த 4-ஆம் கட்ட ஊரடங்கு வரும் 18-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் செவிலியர்களாக பணியாற்றி வரும் மணிப்பூரைச் சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
கொரோனாவால் உருக்குலைந்து இருக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் செவிலியர்களின் சேவையை மணிப்பூரைச் சேர்நதவர்கள் தான் நிவர்த்தி செய்து வருகின்றனர். அங்கு பணியாற்றும் செவிலியர்களில் 2000-க்கும் மேற்பட்டோர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் தான்.
மேலும் கேரள மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். மற்ற வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த செவிலியர்களும், ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் மேற்கு வங்க அரசும், அம்மாநில மக்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.