தாராபுரம், ஏப். 11-ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின்ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என வைகோ பேசினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளராக போட்டியிடும் அ.கணேசமுர்த்தியை ஆதரித்து தாராபுரம்அண்ணாசிலை அருகில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இதில்திமுக இளைஞரணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்தூர் சாமிநாதன், திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: இந்தியா ஒரு ஆபத்தான கட்டத்தை கடந்து செல்லவேண்டியிருக்கிறது. இந்த பகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்வர்கள் என அனைத்து சமுகத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இந்த ஒற்றுமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என அச்சமாக உள்ளது. நேற்று முன்தினம் கோவை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மிகுந்த ஆபத்தான கருத்துக்களை பேசியிருக்கிறார். நான் சந்தித்த பிரதமர்களில் யாரும் இதுபோன்ற ஆபத்தான செய்தியை கூறியதில்லை. புல்வாமா தாக்குதலில் 42 வீரர்கள்சிந்திய ரத்தத்தை நினைத்து பார்த்து முதல்முறை வாக்காளர்கள் ஓட்டு போடவேண்டும் என்று பேசுகிறார். இது சர்வாதிகார பேச்சு, ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்றவர்கள் பேச்சல்லவா. இனியும் இவர் கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் என்ன நடக்குமோ என அச்சமாக உள்ளது.
இந்த நாட்டில் மதச்சார்பின்மை பற்றி பேசியவர்கள் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். மோடி கண்டனம்தெரிவித்தது உண்டா. மிகச்சிறந்தசிந்தனையாளர் கல்புர்கி. இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் பாதுகாக்கபடவேண்டும் என எழுதி வந்த அவரைநட்ட நடுத்தெருவில் சுட்டுக்கொன்றார்கள். அனைத்து மதத்தை சேர்ந்த சகோதரர்களும் ஒற்றுமையாக வாழவும் அவரவர் மதஉரிமை குறித்து பேசி வந்த நரேந்திர தபோல்கர். கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஸ்வர் போன்ற சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மோடி கண்டித்திருக்கிறாரா. முஸ்லீம்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று ஒரு மத்திய அமைச்சர் பேசினார். அப்போது இது தவறு. மிக மிக ஆபத்தானது என மோடி கண்டித்தாரா. பதவி நீக்கினாரா. தாத்திரியில் முகம்மது அக்லக்கை மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொன்றார்களே அதற்குகண்டனம் தெரிவித்தாரா. ஆக ரத்தக்களரி ஏற்படட்டும் என்றுதானே வேடிக்கை பார்த்தீர்கள். 3 ஆயிரம் கோடி செலவில் சிலைஅமைத்திருக்கிறீர்களே அந்த வல்லபாய் பட்டேலின் பேச்சுக்களை திருப்பி படித்துப் பாருங்கள். பிர்லா மாளிகையில் மாலை நேரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றான் கொடிய கொலைகாரன் நாதுராம் கோட்சே. அவனுக்கு சிலை வைக்கவேண்டும் என கூறியபோது இந்திய மக்கள் எவ்வளவு வேதனைப்பட்டார்கள்.
சரக்கு மற்றும் சேவை வரியால்ஆயிரக்கணக்கான மளிகை கடைகாரர்களின் வாழ்வு சிதைந்து போனது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் தொழிற்சாலைகள் முடப்பட்டு 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். வேலைஇல்லா திண்டாட்டத்தை போக்க ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்று சொன்னீர்களே குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதா. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரு.15 லட்சம் போடுவேன் என கூறினீர்களே செய்தீர்களா. கேஸ் சிலிண்டர் விலை ரு.450 ல் இருந்து ரு.900 ஆகியுள்ளது. கேபிள் கட்டணம் ரு.250 ஆகியுள்ளது. ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்துதான் திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயகடன்கள் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, 5 சவரன் வரை நகைகடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவித்துள்ளார். அதேபோல ராகுல்காந்தி பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டவராக உள்ளார். அதனால்தான் பறிக்கப்பட்ட மாநிலங்களின் உரிமை மீண்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என கூறுகிறார். இதே நேரம் நரேந்திர மோடி பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதம் திணிக்கப்படும் என கூறுகிறார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையையும், பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் பாருங்கள். ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மாதம் ரு.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல்காந்தி உறுதியளிதுள்ளார். இதை மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.
தமிழகத்தை திட்டமிட்டு நரேந்திர மோடி அரசு வஞ்சித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி தந்துள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு தண்ணீர் வராது. காவிரி கூட்டு குடிநீர்திட்டத்திற்கு தண்ணீர் கிடைக்காது. தஞ்சை பகுதியில் 25 லட்சம்விவசாய நிலங்கள் அடியோடு பாழாகிவிடும். தஞ்சாவூர் எத்தியோப்பியா போல மாறும்.தேர்தலுக்காக மட்டும் சொல்லவில்லை. தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தாழி உள்ளிட்ட பொருட்களை கார்பன் சோதனைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பினார்கள். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. பழமையான நாகரீகமும், உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்த தமிழினத்தின் தொன்மையை மறைக்க மோடி அரசு முயன்றுள்ளது. மீண்டும் இவர் கையில் அதிகாரம் வந்தால் நினைப்பதற்கு பயமாக இருக்கிறது. மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் விஜய்மல்லையா, நீரவ்மோடி, விக்ரம் கோத்தாரி போன்ற 23 பேர் 90 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள். மோடி கார்பரேட் கம்பெனிகளுக்கு பிரதமராக இதுவரை இருந்துள்ளார். அதனால்தான் 42 பேர் உயிரிழந்தைதை எண்ணி ஓட்டுபோடவேண்டும் என்று கூறுகிறார். ரூ.526 கோடி ருபாய்க்கு வாங்குகிற விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு வாங்க பேரம் பேசி வாங்க ஒப்பந்தம் போட்டது குறித்து இந்து நாளிதழ் பகிரங்கமாக செய்தி வெளியிட்டது. ஊழல்களால் மோடி அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது. 13 பேரை சுட்டுக்கொன்றது மோடியின் கைப்பாவை எடப்பாடி அரசு. எனவே இதையெல்லாம் சிந்தித்துபார்த்து ஜனநாயகம், மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட ஈரோடு தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் அ.கணேசமுர்த்தியை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.