கொச்சி, ஜூலை 15- மத்திய அரசின் கோவிட் தடுப்பு விதிமுறைகள் குறித்த உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுறுத்தியது. தலைமைச் செயலாளரும், டிஜிபியும் விதி முறைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டது. கட்டுப்பாடுகளை மீறினால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே அதற்கான பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவுபடுத்தியது. கோவிட் வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அதில் ஜூலை 31 வரை மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் எதிர்தரப்பான அரசியல் கட்சிகளுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசின் கோவிட் வழிகாட்டுதல் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்தது.