திருவனந்தபுரம், ஆக.13- இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய கேரளத்தின் தெற்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து தரப்பினரும் மிகுந்த எச்சரிக்கை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14இல் மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மத்திய வானிலை அறிவிப்பு மையம் சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. திருவனந்தபுரத்தில் நெய்யார் அணை திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திறக்கப்பட்ட அருவிக்கரை அணையின் மதகுகள் மேலும் உயர்த்தப்பட்டன. மற்ற இடங்களில் செவ்வாய் முதல் மழையின் தீவிரம் குறையும் என மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்க கடலின் உட்பகுதியில் உருவான புயலால் கேரளத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனாலும் வியாழக்கிழமை வரை குறிப்பிட்ட சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 9 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.