திருவனந்தபுரம்:
சார்ஜாவில் இருந்து முதல் விமானத்தில் பயணம் மேற்கொண்டபோது ‘பின்னால் நானும் வருவேன், முத்தான குழந்தையின் முகம் பார்க்க வேண்டும்’ என்பதுதான் கர்ப்பிணி மனைவி ஆதிராவிடம் நிதின் கூறியது. அந்த வார்த்தைகளை செயல்படுத்த இன்று நிதின் உயிருடன் இல்லை.
வெளிநாடுகளில் வாழும் கர்ப்பிணிகளை சொந்தமண்ணான கேரளத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தை அணுகிய நிதின் சந்திரன் (29) திங்களன்று துபாயில் மாரடைப்பால் இறந்துவிட்டார். கர்ப்பிணி மனைவி ஆதிராவுடன் கேரளத்திற்கு வந்திருக்க வேண்டியவர், தனது விமான இருக்கையை மற்றொரு கர்ப்பிணிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு முன்னுரிமை பட்டியலில் பின்தங்கி, சார்ஜாவில் முடங்கி விட்டார் நிதின். ஞாயிறன்று இரவு தூங்கச் சென்றவர் காலையில் எழுந்திருக்கவில்லை. சக ஊழியர்கள் அழைத்தும் வாசல் திறக்காததைத் தொடர்ந்து நிதின் இறந்து போனது தெரியவந்தது.
ஐடி பொறியாளரான ஆதிரா 8 மாத கர்ப்பிணியாக சார்ஜாவில் இருந்து பிரசவத்துக்காக கேரள மாநிலம் பேராம்பிறாவில் உள்ள வீட்டுக்கு வர முடிவு செய்திருந்தார். கோவிட் நோய் பரவலை தடுக்க விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணம் தாமதமானது. ஆதி ராவைப்போல் பிரசவத்துக்காக சொந்த ஊர் திரும்ப காத்திருந்த ஏராளமான கர்ப்பிணிகளுக்காக உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடினார் ஆதிரா. இந்நிலையில் மே 7 ஆம் தேதி துபாயில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் புறப்பட்டு ஆதிரா கேரளம் வந்து சேர்ந்தார். செவ்வாயன்று ஆதிராவுக்குகோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தனதுகணவருக்கு தெரிவிக்க அவரது செல்பேசி யை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தார்ஆதிரா.
இந்நிலையில் புதனன்று காலை கொச்சிக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்ட நிதினின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு கொண்டுவரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஆதிராவின் பார்வைக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டு பின்னர் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சார்ஜாவில் யூரோ கல்ப் நிறுவனத்தில் இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றி வந்தார் நிதின். கேரள ரத்த தானம் செய்வோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே செயல்பட்டுள்ளார். பொதுநல ஊழியரான நிதினின் மரணம் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.