திருவனந்தபுரம்:
மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பின் பகுதியாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் எந்த ஏற்பாடும் இல்லை என கேரள நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் அறிவிப்புகள் குறித்து செய்தியாளர்களி்டம் தாமஸ் ஐசக் மேலும் கூறியதாவது: மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் மட்டுமே கடைகளையும் தொழில் நிறுவனங்களையும் திறக்க முடியும். அதற்கு பதிலாக வங்கிகள் கடன் வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறுகிறார். இவை அனைத்தும் அர்த்தமற்ற அறிவிப்புகள். ஏற்கனவே அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடிக்கான தொகுப்பிற்கு உட்பட்ட சிலவற்றுடன் மக்களுக்கான உதவி நின்றுவிடும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
ஓராண்டு கால அவகாசம்
சிறுதொழில்களுக்கான அறிவிப்பில் ரூ.3 லட்சம் கோடிக்கான கடன் வழங்கும் பொறுப்பு வங்கிகளுக்கு. கோவிட்டின் துவக்கம் முதல் கடன் விநியோகம் முடிவுக்கு வந்த நிலையில் வங்கிகள் உள்ளன. கடன்களை திருப்பிச் செலுத்தும் கால அளவை நீட்டிப்பதும், பெருமளவில் கடன் தள்ளுபடி செய்வதுமே சிறுதொழில்களின் முக்கிய தேவை. விவசாயம், வணிகம், சிறுதொழில் ஆகிய துறைகளின் கடன்களை திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை ஓராண்டாவது நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளம் கேட்டுக் கொண்டது.
இந்த கடன்களில் கணிசமான பகுதியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது சிறுதொழில், வணிகம், வேளாண் துறையினர் மட்டுமல்லாது மாநிலங்களின் முக்கிய கோரிக்கையுமாகும். இதற்காக ரூ.1.75 லட்சம் கோடியை மத்திய அரசும் வங்கிகளும் சேர்ந்து ஏற்க வேண்டியதாக இருக்கும். ரூ.20 லட்சம் கோடி தொகுப்பில் இதை உட்படுத்துவது அப்படி ஒன்றும் கடினமானதல்ல என்றும் தாமஸ் ஐசக் கூறினார்.
மறந்து போகும் மாநிலங்கள்
மத்திய அரசுக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லாத சில அறிவிப்புகளாக மத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பு உள்ளது. மத்திய அரசு நேரடியாக இதற்காக செலவு செய்வது ரூ.30,000 கோடியாக சுருங்கிவிடும் என்பதையே இதுவரையிலான அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. மற்ற நாடுகளைப் போலவே பெரிய அறிவிப்புகளால் பயனில்லை என்று நிதி ஆலோசகர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதற்கான சாத்தியப்பாடுகள் சிலவற்றின் விளக்கமாக மட்டுமே மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளும் உள்ளன. தொகுப்பு விவரங்கள் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத சில அறிவிப்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டன.
பிரதமரும் மத்திய நிதி அமைச்சரும் பொருளாதார தொகுப்பு அறிவிக்கும் போதெல்லாம் மாநிலம் என்கிற வார்த்தையை மறந்துவிடுகிறார்கள். மாநிலங்களை விலக்கிவைத்து, கோவிட்டை எதிர்கொள்ளலாம் என்று இவர்கள் கருதுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. துயரங்களை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும். பட்டினி கிடக்க வேண்டும். அதன் மூலம் கோவிட்டை தோற்கடிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அணுகுமுறை. மின் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள ரூ.90,000 கோடி கடன் திட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது மட்டுமே மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பு வழங்கியுள்ள விசித்திரமான ஆதாயம்.
மாநிலங்களின் துணையுடனும், மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கியுமே நெருக்கடிகளை கடக்க முடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டியதாக உள்ளது எனவும் தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் கூறினார்.
கணித விளையாட்டு
ரூ.20 லட்சம் கோடிக்கான தொகுப்பை வரவேற்பதற்கு முன்பு அதன் உள்ளடக்கத்தை ஆய்வு செய்திருக்க வேண்டுமல்லவா என்று கேட்ட நண்பர்கள் உண்டு. அவர்களது கேள்வி மிக சரியானது என்பதையே இன்று நிதி அமைச்சரின் பொருளாதார தொகுப்புத்திட்டம் குறித்த அறிவிப்பு தெளிவு படுத்தியது. இதுதான் தொகுப்பு திட்டத்தின் திசைவழி என்றால் மத்திய பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் சுட்டிக்காட்டிய கணித விளையாட்டாகவே முடிந்துவிடும்.
மே ஆறாம் தேதி எக்கனாமிக் டைம்ஸ்-க்கு மத்திய பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் அளித்த பேட்டியில், மற்ற பல நாடுகளைப்போல் இந்தியா தேசிய வருவாயில் பத்து சதவிகிதம் தொகுப்பு நிதிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை கடுமையாக எதிர்த்தார். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஒதுக்கீடு செய்த 15 மற்றும் 13 சதவிகிதமெல்லாம் ஊதி பெருக்கப்பட்ட கணக்கு என்றார் அவர். பிரதமரின் தொகுப்பும் இதுபோன்றதாக இருக்கவே வாய்ப்புள்ளது. இன்று (மே 13) அறிவிக்கப்பட்ட இனங்களுக்கு மத்திய பட்ஜெட்டிலிருந்து அல்லது கடன் பெற்று மத்திய அரசு வழங்க வேண்டியதன் கூட்டுத்தொகை ரூ.30,000 கோடிகூட வராது. மீதமுள்ளவை அனைத்தும் வங்கிகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளன என தனது முகநூல் பக்கத்தில் தாமஸ் ஐசக் குறிப்பிட்டுள்ளார்.