கரோனா வைரஸ் காரணமாக கேரளா சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள உகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில், கரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா பீதி காரணமாக கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வெளிநாட்டினர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் கேரளா செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், கேரள சுற்றுலாத்தலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலாப்பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் ஓட்டல்களில் தங்க முன்பதிவு செய்தவர்களும் முன்பதிவை ரத்து செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கேரள சுற்றுலாத்துறைக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.