திருவனந்தபுரம், மார்ச் 31- கொரோனா பாதித்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் திங்களன்று இரவு உயிரிழந்தார். இது கேரளத்தில் நடந்துள்ள இரண்டாவது கொரோனா மரணமாகும். திருவனந்தபுரம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஸீஸ் (68). இவருக்கு மார்ச் 13 அன்று கரோனா பாதிப்பின் அறிகுறிகள் தெரியவந்தது. வீட்டு கண்காணிப்பிலிருந்த இவர் பத்துநாள் கழித்து 23 ஆம் தேதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். திங்களன்று (மார்ச் 30) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனை முடிவு நோய் இல்லை என வந்தது. ஆனால் தனிமை வார்டில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பு ஏதும் இல்லாத இவருக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது என்பது குறித்த சரியான விவரம் தெரியவில்லை. இவருடன் தொழுகையில் பங்கேற்றவர்களிடம் பரிசோதனை நடந்து வருகிறது.
கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இதுபற்றி கூறிகையில், கேரளத்தில் நடந்த இரண்டு கொரோனா மரணங்களையும் தடுக்க அரசும் சுகாதாரத்துறையும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆனால் இருவரது வயதும், இதய நோயும் அதையொட்டிய சில பாதிப்புகளும் இருந்தது பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்றார். மேலும், மருத்துவக்குழு அமைத்து அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயதானவர்களிடம் இதயநோய், நீரிழிவு போன்றவற்றுடன் கொரோனா நோயும் தாக்கினால் மரணம் ஏற்படுகிறது. எனவேதான் வயதானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அரசு கேட்டுக்கொள்கிறது என அமைச்சர் கூறினார்.