tamilnadu

img

கேரளத்தில் பழங்குடியினருக்கான வணிக வளாகம்

கொச்சி:

பழங்குடியின மக்களின் உணவு முறை, கைவினைப் பொருட்கள் செய்முறை மற்றும் அவர்களது சமூக வாழ்வை வெளிப்படுத்தும் வகையில் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு வணிக வளாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.


கேரள பழங்குடியின வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் சுமார் 2,000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டடப் பணிகள் முடிவடைந்துள்ளதால் இதுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படவுள்ளது.


பழங்குடியினர் செய்யும் பொருட்களை விற்பதற்கான களமாகவும், தனித்துவமான கலைப்பொருட்கள் மற்றும் உணவு முறைகளை அறியும் விதமாகவும் இந்த வணிக வளாகம் அமையவுள்ளது. பழங்குடியினருக்கென்று நிலையான விற்பனையிடம் இல்லாத காரணத்தினால் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டே இத்திட்டத்துக்கு அடித்தளமிடப்பட்டாலும், 2011ஆம் ஆண்டில்தான் இதற்கான பணிகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர், பழங்குடியினர் வளர்ச்சித் துறை இயக்குநர், மாவட்டப் பழங்குடியின அலுவலர் அடங்கிய குழுவின் மூலமாக இந்த வணிக வளாகம் நிர்வகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தைப் பொறுத்தவரை தோடர்கள், குரும்பர்கள், பளியர்கள்,இருளர்கள், கோடர்கள், காட்டு நாயக்கர்கள் எனும் ஆறு பிரிவுகளில் அதிகளவில் பழங்குடியின மக்கள் உள்ளனர். மொத்தமாக 36 பிரிவுகளைச்சேர்ந்த சுமார் 7.95 லட்சம் பழங்குடியின மக்கள் தமிழகமெங்கும் உள்ளனர். ஆனாலும் சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பழங்குடியினர் எண்ணிக்கை அதிகளவில்உள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களில் சுமார் 85 சதவிகிதம் பேர் இன்னும் கிராமங்களிலேயே வசிக்கின்றனர். தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், அவர்களது திறனை, கலைநயத்தை வெளிப்படுத்தும் விதமான திட்டங்கள் ஏதும் இதுவரை பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை.