tamilnadu

img

கேரளத்தில் மேலும் 58 பேருக்கு கோவிட்...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சனி யன்று மேலும் 58 பேருக்குகோவிட்-19 நோய் தொற்று உறுதியானது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 17, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 31 பேர் உள்ளனர். திருவனந்தபுரத்தில் சனியன்று கோவிட் நோய் தடுப்பு ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: கோவிட் நோய் உறுதியான 58 பேரில்திரிச்சூர் மாவட்டத்தில் 10 பேர், பாலக்காடு 9, கண்ணூர் 8, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 4 பேர், காசர்கோடு 3, திருவனந்தபுரம், ஆலப்புழா தலா 2 பேர், கோட்டயம் மாவட்டத்தில் ஒருவரும் உள்ளார். இதல்லாது ஏர் இந்தியா ஊழியர்கள் ஏழு பேரும் உள்ளனர். இதில் ஆலப்புழா மாவட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது உயிரிழந்தவரின் பரிசோதனை முடிவும் உள்ளது. ஒரு சுகாதார ஊழியருக்கும் (பாலக்காடு), இருவருக்கு தொடர்பு மூலமும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.  

மருத்துவமனைகளில் கோவிட் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் சனியன்று குணமடைந்தனர். மொத்தம் 624 பேர் கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றனர். இதில் 575 பேர் குணமடைந்துள்ளனர். கேரளத்திற்கு வெளியிடங்களில் இருந்து விமான நிலையம் வழியாக 17,720 பேர், துறைமுகம் வழியாக 1621 பேர், சோதனை சாவடி வழியாக 97,952 பேர், ரயில் நிலையங்கள் வழியாக 9796 பேர் என மொத்தம் 1,27,089 பேர் வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 1,30,157 பேர் கண்காணிப்பில் உள்ளனர். .இவர்களில் 1,28,953 பேர் வீடு அல்லது நிறுவன கண்காணிப்பில் உள்ளவர்கள். 1204 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். சனியன்று 243 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 3206 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 65,002 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 62,543 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன. இதல்லாமல் சென்டினல் சர்வைலன்ஸின் பகுதியாக சுகாதார ஊழியர்கள், புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து பெற்ற 12,255 மாதிரிகளில் 11,232 இல் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது.சனியன்று  மேலும் 5 பகுதிகள் ஹாட் ஸ்பாட்டுகளாக மாறின. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மாணிக்கல், பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு நகராட்சி, தச்சப்பாறை, பட்டாம்பி, கோட்டயம் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஆகியவை பதிய ஹாட் ஸ்பாட்டுகள். மாநிலம் முழுவதும் தற்போது 106 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.