tamilnadu

img

கேரளத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள்; மேலும் நான்கு மாதங்களுக்கு உணவு கிட்; சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.100 அதிகரிப்பு

திருவனந்தபுரம்:
கேரளத்தில் 100 நாட்களுக்குள் 100 திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும், கோவிட் கால நிவாரணமாக மேலும் நான்கு மாதங்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்படும் எனவும், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாதம் ரூ.100 அதிகரிக்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு ஓணப்பரிசுகளாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஞாயிறன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

கோவிட் தொற்றுநோயை சமாளிக்க பயனுள்ளதாக ‘100 நாட்கள் 100 திட்டங்கள்’ இருக்கும். இந்த கொள்ளைநோய்க்கு நடுவிலும்,  மலையாளிகளுக்கு மகிழ்ச்சியான ஓணத்தை உறுதி செய்ய அரசு தன்னால் முடிந்தஅனைத்தையும் செய்துள்ளது. கோவிட்டை எதிர்த்து போராடிக்கொண்டே  நாம் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்.இந்த தொற்றுநோய் நமது சமூகத்திலும்பொருளாதாரத்திலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புதிய கேரளாவை உருவாக்குவதற்கான பல நடவடிக்கைகள் முழு வீச்சில் இருந்த நேரத்தில் இந்த பெரிய நோய் வந்தது. இதற்கு முன்னர் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டோம். அதன்மூலம், வேகம் குறைந்த நடவடிக்கைகளை உற்சாகத்துடன் தொடர்ந்தாக வேண்டும். இது இந்த அரசின் ஐந்தாம் ஆண்டு. கோவிட் சூழ்நிலையில் நான்காவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் கைவிடப்பட்டன. எனினும், வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

சாமானியர்களுக்கு பாதுகாப்பு
கோவிட் 19 வரும் நாட்களில் தொடர்ந்து வலுவாக இருக்கும். எனவே, சாதாரண மக்களுக்கு நேரடியாக அதிகபட்ச நிவாரணத்தை அரசு வழங்கும். யாரும் பசியோடு இருக்கக்கூடாது. நெருக்கடியின் போது அரசால் தொடங்கப்பட்ட மிகவும் பாராட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விநியோகம் அடுத்த நான்கு மாதங்களுக்கு தொடரும். இப்போது செய்யப்படுவது போல் உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள் ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.இந்த அரசாங்கத்தைப் பற்றி எது சிறந்ததுஎன்று கேட்டால், முதலில் சொல்லக்கூடியது சமூக நல ஓய்வூதிய விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். யுடிஎப் அரசு முடிவுக்கு வந்தபோது, 35 லட்சம் பேருக்கு  தலா ரூ .600 ஓய்வூதியம். அதையும் துல்லியமாக விநியோகிக்கக் கூட முடியவில்லை. சட்டமன்றத்தேர்தலில் எல்டிஎப் தேர்தல் அறிக்கையில்மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் சமூக நல ஓய்வூதியங்களின் அதிகரிப்புஒன்றாகும். அதை அப்படியே அமல்படுத்த முடிந்தது மிகவும் பெருமிதமானது. ஓய்வூதியம் ரூ .600 லிருந்து ரூ .1000 ஆகவும் பின்னர்ரூ.1200 ஆகவும் அதையடுத்து ரூ .1300 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இந்த அரசின் காலத்தில் சமூக நல ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 35 லட்சத்திலிருந்து 58 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள 23 லட்சம் பேரை புதிதாக சேர்க்க முடிந்தது சிறிய விஷயமல்ல. நிலுவைத் தொகை இல்லாமல் ஓய்வூதியத்தை விநியோகிக்கவும் முடிந்தது. இப்போது இந்த துறையில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.ஒன்று: சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் மாதம் ரூ.100 வீதம்  அதிகரிக்கப்படுகிறது.இரண்டு: இனி ஓய்வூதியம் மாதந்தோறும்  விநியோகிக்கப்படும்.  

சுகாதாரப் பாதுகாப்பு
கோவிட்டுக்கு எதிரான பொது சுகாதார முறை மேலும் பலப்படுத்தப்படும். அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் மனித வளங்களை பயன்படுத்து வதிலும் அரசாங்கம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கோவிட் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, தேசிய சுகாதாரப் பணி (என்எச்எம்) மூலம் 9,768 சுகாதார ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,200 மருத்துவர்கள் மற்றும் 1,152 தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் தேவைப்பட்டால், தேவையான ஊழியர்கள் அடுத்த 100நாட்களுக்குள் சுகாதார அமைப்பில் சேர்க்கப்படுவார்கள். முதல் வரிசை கோவிட் சிகிச்சைமையங்களின் செயல் திறன் மேம்படுத்தப் படும்.  கோவிட் சோதனைகளின் எண்ணிக்கைஒரு நாளைக்கு அரை லட்சமாக உயர்த்தப் படும்.மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களை மருத்துவமனை வசதிகளுடன் கூடிய முழுமையான குடும்ப சுகாதார மையங்களாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 386 குடும்ப சுகாதார நிலையங்கள் பூர்த்தி செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. அடுத்த 100 நாட்களில் 153 குடும்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்படும். இங்கு காலையும் மாலையும் புறநோயாளிகள் சிகிச்சை பெறலாம். மருத்துவக் கல்லூரி / மாவட்டம் / பொது / தாலுகா மருத்துவமனைகளின் ஒரு பகுதியாக 24 புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும். 10 புதியடயாலிசிஸ் மையங்கள், 9 ஸ்கேனிங் மையங்கள், 3 புதிய கேத் ஆய்வகங்கள் மற்றும்2 நவீன புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நிறைவடையும்.

பொதுப் பள்ளிகள்
2021 ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகள்திறந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சுமார் ஒரு வருடம் பள்ளி சூழலில் இருந்து விலகி பள்ளி வளாகத்திற்கு திரும்பி வரும் குழந்தைகள் புதிய கற்றல் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் வரவேற்கப்படுவார்கள். 500 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கிப்பி நிதியுதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.5 கோடி செலவில் 35 பள்ளி கட்டிடங்களும், ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட 14 பள்ளி கட்டிடங்களும் 100 நாட்களுக்குள் திறக்கப்படும். மற்ற 27 பள்ளி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும். 250 புதிய பள்ளி கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.