tamilnadu

img

துப்புரவு பணியாளர்களுக்கு முழு சம்பளத் தொகையை வழங்க கோரிக்கை

 கரூர்: தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறியதாவது, கரூர் நகராட்சியில் உள்ள 49 வார்டுகளிலும் பணியாற்றும் 1300 க்கும் மேற்பட்ட  ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு, ஆட்சியரின் செயல்முறை கடிதத்தின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு தலா ரூ 381 சம்பளம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இத்தொகையை வழங்காமல், நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா ரூ 315  வழங்கப்படுகிறது. இதில் ஏறக்குறைய நாளொன்றிற்கு ஒரு நபருக்கு தலா 66 ரூபாய் குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது. இது எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது என பணியாளர்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. உடனடியாக முழு தொகையான ரூ 381 சம்பளத்தை கரூர் நகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் நகராட்சியில் பணி பணியாற்றும் அனைத்து விதமான ஒப்பந்த பணியாளருக்கும் வைப்புநிதி, இஎஸ்ஐ ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, வைப்பு நிதி பற்றிய தகவலோ, ஆவணங்களோ தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. உடனடியாக பத்தாண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ வைப்பு நிதி ஆவணங்களை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் பல்வேறு வகைகளில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பல்வேறு பணப் பயன்களை நகராட்சி நிர்வாகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  அதனை தொழிலாளர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜனநாயக அமைப்புகள், ஊழியர்கள், பொது மக்களை திரட்டி தலித் விடுதலை இயக்கத்தின் தலைமையில் கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.  பேட்டியின் போது பட்டியலின கூட்டமைப்பின் அமைப்பாளர் புகழேந்தி, சமநீதி கழகம் முதன்மை அமைப்பாளர் அண்ணாதுரை, தலித் விடுதலை இயக்க மாநில துணைத்தலைவர் ராஜகோபால், இளைஞர் அணி அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பூபதிராஜா, சமநீதி கழக செய்தித் தொடர்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.