பெங்களூரு:
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு, பாஜக தலைவர் எடியூரப்பா, தன்னிடம் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜீவ் கவுடா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜீவ் கவுடா, சிக்கமகளூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, இரண்டு நாட்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள ஏனைய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ-க்களைப் போல, என்னையும் ராஜினாமா செய்யுமாறு கூறினார். அவ்வாறு ராஜினாமாசெய்துவிட்டு, பாஜக-வில் இணைந்தால் எனக்கு எதிர்ப்பார்க்க முடியாத அளவுக்கு பணமும், பதவியும் தருவதாகஆசை காட்டினார். அதனை நான் ஏற்க மறுத்துவிட்டேன்.எனக்கு பணமும், அதிகாரமும் வேண்டாம் என கோபத்துடன் கூறியதால் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இவ்வாறு ராஜீவ் கவுடா கூறியுள்ளார்.