tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டேன்... அசாம் பாஜக முதல்வரும் எதிர்ப்பு

கவுகாத்தி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா, மேற்குவங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் மாநிலங்களில் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான், பாஜக-வைச் சேர்ந்த அசாம் மாநில முதல்வரும், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்றுகூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.சில நாட்களுக்கு முன்பு, டுவிட்டரில் பொத்தாம் பொதுவாககருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்த, அசாம் பாஜக முதல்வர் சர்பானந்த சோனாவால், “அசாம் மற்றும் அசாமி சமூகம் மீதான எனது அர்ப்பணிப்பு என்றென்றும் அப்படியே இருக்கும். அசாம் மக்களின் ஆசீர்வாதத்துடன் நான்இந்த நிலத்திலிருந்து முதல்வராகிஉள்ளேன். அதை ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் ஒரு தேசியகட்சியில் இருந்தாலும் கூட.” என்றுகூறியிருந்தார். அப்போதே அது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. சர்ச்சையாகவும் மாறியது. இந்நிலையில், அந்த சர்ச்சைக்கு தானே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதே டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பாஜக முதல்வர் சர்பானந்தா சோனாவால் வெளியிட்டுள்ளார். அதில், “அசாமின் மகன் என்ற முறையில் நான் ஒருபோதும் எனது மாநிலத்தில் வெளிநாட்டினரை குடியேற அனுமதிக்க மாட்டேன். இந்த சர்பானந்தா சோனோவால் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டான்..” என்று வெளிப்படையாகவே சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மத்திய பாஜக அரசுத்தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.