சண்டிகர்:
ஹரியானாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. தில்லியை அடுத்த மாநிலமான ஹரியானாவின் நிலைமை ஏறத்தாழ தில்லியின் பாதிப்பு நிலவரத்தை ஒத்ததாக உள்ளது.தொற்றால் பலியானோர் எண்ணிக்கை தில்லியை விட குறைவாக இருந்தாலும் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.
ஆரம்பத்தில் கோவிட் 19 தொற்று குறைவாகஇருந்த மாநிலம் இன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்திற்குவந்து விட்டது.ஜுன் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது.தொற்று உறுதி செய்யப் படுபவர்களின் விகிதம் தில்லியை விட அதிகமாக உள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் தொழில் நகரங்களான குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் மாவட்டங்களில் ஜூன் இறுதியில் தொற்று பாதிப்பு விகிதம் 62.69 சதவீதமாக இருந்தது.ஜூன் 26 இல் மாநிலத்தில் மொத்த பாதிப்பு12884 ஆகும்.இதில், இரண்டு தொழில் நகரங்களில் மட்டுமே 8078 ஆகும். சோனிபட் மாவட்டம்மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரிசோதனைகள் செய்வதில், தில்லி, ராஜஸ்தானை விட குறைவாக நடக்கின்றன (10 லட்சம் பேருக்கு 8262).
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை
சிஐடியு மேற்கொண்ட சர்வேயின்படி, தொழில்கள் நிறைந்த குருகிராம், ஃபரீதாபாத் மற்றும் பானிபட் நகரங்களை விட்டு சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தாய் மாநிலங்களிலேயே தங்கிவிட்ட விபரம் தெரிய வந்துள்ளது. பக்கத்து மாநிலமானராஜஸ்தானில் இருந்து மட்டும் ஒரு பகுதியினர் திரும்பி வந்துள்ளனர். சிறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படவே இல்லை.பெரிய தொழிற் சாலைகள் 25 சதவீதம்-50 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்குகிறது. விடுமுறை ஏதுமின்றி தொழிலாளர்களுக்கு தினந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் ஊரடங்குக்கு முன்னரே மந்த நிலையில்தான் இருந்தன.உதிரி பாகங்கள்மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
புலம்பெயர் தொழிலாளர்களை கவர்ந்திழுக்க, அவர்கள் ஹரியானா திரும்பினால் அவர்களுக்கு பயணப்படியாக அரசு ரூ.1500 அளிக்கும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சலுகைஅறிவிக்கப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் ஹரியானா திரும்பவில்லை.கட்டுமானத் துறையிலும், தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படும் உற்பத்தி துறையிலும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
ஒரு பக்கம் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை சந்திக்கும் போது, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறைகளில் செலவினங்களை குறைப்பது என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.நிறுவனங்கள் அவர்களை வேலையை விட்டு விலகுமாறு நிர்ப்பந்திக்கின்றன. எங்கே முறையிடுவது என்று தெரியாமல் ஊழியர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர் நலத்துறை என்ற ஒன்றையே காணவில்லை.மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நபருக்கு, ஒரு நாளைக்கு மளிகைப் பொருட்கள் உட்பட ஐந்து கிலோ கோதுமை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்த போதிலும் ஒருவருக்கு கூட உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை. இது பற்றி மாவட்டஆணையரிடம் புகார் தெரிவித்தபோது அவர் மத்திய அரசிடமிருந்து அவ்வாறு உத்தரவு ஏதும்வரப்பெறவில்லை என்கிறார்.
சிஐடியுவிற்கு மறுப்பு ஆர்எஸ்எஸ்க்கு அனுமதி
சிஐடியு போன்ற அமைப்புகள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கஅனுமதி மறுக்கப்படுகிறது.ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புக்களுக்குமட்டும் நிவாரணம் வழங்க அனுமதிக்கப்படுகிறது.ஜுன் முதல் வாரத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களும் ஊரடங்குத் தளர்வு பாதையில் செல்லஆரம்பித்துள்ளன. தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு மக்கள்பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விதிமுறைகளை வெளியிட்டு மத வழிபாட்டுத் தலங்கள், மால்கள்போன்றவை கூட திறக்கப்பட்டு விட்டன. குருகிராம் போன்ற பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடு மண்டலங்களில் மட்டும் ஊரடங்கை நீடித்து மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.கைத்தால் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்144 கடுமையாக்கப்பட்டுள்ளது. இப்படி,ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அவரவர்பாணியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும், தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்று பரவல் வருகின்ற வாரங்களில் கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்கும்.
பிரண்ட்லைன் (ஜூலை 17,2020) இதழில் டி.கே.ராஜலட்சுமி கட்டுரையிலிருந்து தொகுப்பு: ம.கதிரேசன்