tamilnadu

ஒற்றையாட்சி முறையில் நாட்டை அழிக்கப் பார்க்கிறது பாஜக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்

நாகர்கோவில், ஏப். 9 -கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தேர்தல்அலுவலகத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, நாளுக்கு நாள் பிரகாசமாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்புமக்களையும் சென்று அடைந்திருக்கிறது. இது சாத்தியமா என்று கேட்கிறார்கள். நாட்டின் வருமானம், சுமார் ரூ.230 லட்சம் கோடி. இது ரூ. 400லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றில் ரூ.3.5 லட்சம் கோடியை இலவசமாக கொடுக்க முடியும். இலவசம், மக்களைசோம்பேறி ஆக்கிவிடும் என்பது தவறான கருத்து. மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் ரூ. 6ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளோம். இது எல்லோருக்குமானதல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே.


கோப்பை பாதுகாக்க முடியாதவர்கள்

நாடு பிரதமர் கையில் பத்திரமாக உள்ளது என்று அமித்ஷா கூறுகிறார்.ரபேல் போர் விமான ஊழல் பற்றியகோப்புகளை பாதுகாக்க முடியாதவர்கள், நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என எப்படி நம்பமுடியும்? இந்தியாவை ராணுவமயமாக வைக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். அது மிகப்பெரிய தவறு.பிரதமர் கையில் நாடு பத்திரமாக உள்ளதாக, தொடர்ந்து தமிழகமுதல்வர் பழனிசாமியும் கூறி வருகிறார். அவர் பிரதமர் கையில் பத்திரமாக இருக்கிறாரா, கரும்பு சக்கைபோன்று அவர் பிரதமரால் பிழியப்படுகிறாரா என்பது தெரியவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி. அதிமுக தேர்தல் அறிக்கையை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள்கொண்டு வருவோம். எங்கள் வரி விதிப்பு 18 சதவீதத்திற்கு அதிகமாக இருக்காது. இந்திய தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். பாஜகஒற்றையாட்சி முறையை விரும்புகிறது. ஒரு மனிதன் என்ன உண்ணவேண்டும், எப்படி இருக்க வேண்டும்?என்பதை அரசாங்கம் முடிவு செய்யக்கூடாது. அது ஜனநாயகமில்லை. பாஜக ஒரே மதம், ஒரே மொழி என ஒற்றையாட்சி முறையில் நாட்டை அழிக்கப்பார்க்கிறது என அவர் கூறினார்.