செங்கல்பட்டு, ஏப். 18-காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் பகுதியில் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் அவதிபட்டனர். 17ஆவது மக்களவைக்கான தேர்தல் வியாழக்கிழமை (ஏப். 18) நடைபெறுவதையொட்டி புதன்கிழமை (ஏப். 18) மாலை முதல் பெருங்களத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் தனியார் நிறுவனங்களில் இரவுப் பணி முடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு வந்த இளைஞர்கள் படிகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயனம் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, மதுரை, சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் போதுமான பேருந்துள் இயக்கப்படாததால் பயணிகள் கடுமையாக பாதிக்பப்ட்டனர்.பேருந்துக்காக காத்திருந்த சில இளைஞர்களிடம் கேட்டபோது இரவுப்புணியை முடித்துவிட்டு காலையில் சென்று வாக்களிக்கலாம் என்று பேருந்து நிலையம் வந்தால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. எப்படி சென்று வாக்களிப்பது என்று தெரியவில்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவலர்களுக்கு தபால் வாக்குகள் கொடுப்பது போல் அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கும் தபால் வாக்கு கொடுத்து இதுபோன்ற நேரங்களில் பணி செய்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றனர்.