கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாக இருளர் இன மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உ.கீரனூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குடியிருந்து வரும் இருளர் இன மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இனத்தைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உட்பட எதுவும் இல்லாமல் வசித்து வந்த இவர்களின் நிலை குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியையொட்டி இவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் இவைகள் வழங்கப்பட்டன. ஆனால் இவர்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா இதுவரை வழங்காததால் இங்கேயே குடியிருந்து வரும் இவர்கள் தற்போதைய மழையால் மிகப் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். கீற்று மற்றும் ஓலைக் குடிசைகளில் வசித்து வரும் நிலையில் குடிசைகளில் ஈரம் அதிகமாக உள்ளதால் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மிகப் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இவர்களின் அடிப்படை பிரச்சினையாக இருக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கி இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவதாக தெரிவித்தனர். மேலும் உணவு, போர்வை உள்ளிட்ட மழை பாதிப்பு நிவாரண நடவடிக்கைகள் முழுமையாக இவர்களை சென்றடைய வேண்டும் என்பது மிக முக்கியம்.