சிதம்பரம், செப். 11- மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 13 ஆம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தது. பின்னர் அந்த தண்ணிர் கும்பகோணம் அருகேயுள்ள கீழணைக்கு வந்தடைந்தது இதனை 11 ஆம் தேதி பாசனத்திற்காக கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கீழணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசின் கொரடா ராஜேந்திரன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சம்பத், “கீழணையில் இருந்து விவசாயிகளின் பாசனத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் வடவாறு வாய்க்கால் மூலம் 1800 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி, தெற்குராஜன் வாய்காலில் 400 கனஅடி திறக்கப்பட்டுள்ளது” என்றார். மூன்று மாவட்டங்களில் மொத்தம் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவ்வபோது பாசனத்தேவைகேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் போதுமான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு ராதா மதகு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 10 கனஅடியும், வீராணம் புதிய மதகு வழியாக 74 கனஅடியும், ஏரியில் உள்ள மொத்தம் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்துவைத்தனர். இதன் மூலம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 102 கிராமங்களில் 44856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும்.