கடலூர், ஏப்.5-
நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவோம் என்று கூறிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது. பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தொகுதி வாரியாக பல்வேறு குழுக்களை தேர்தல் அலுவலர் அமைத்துள்ளார். இந்தக்குழுக்களும், தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சிகளுக்கே சாதகமாக நடந்துகொள்கின்றன. இதுகுறித்து ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எதிர் கட்சித் தலைவர்களின் இந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான்என்று கடலூர் சம்பவமும்நிரூபித்திருக்கிறது.தமிழகம் முழுவதுமே எதிர் கட்சிகளின் வாகனங்களைத்தான் திரும்ப, திரும்ப சோதனை செய்கின்றனர். ஆளும் கட்சிகள் செல்லும் வாகனங்களை கண்டு கொள்வதே இல்லை என்பதற்கு கடலூர் சம்பவம் உதாரணமாகும். ஏப்.4 ஆம் தேதி கடலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நெய்வேலி கூட்டத்தை முடித்துவிட்டு பண்ருட்டி கூட்டத்தை 10 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரவு 9.15 மணி. காடாம்புலியூர் வந்ததும் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்ற வாகனத்தையும், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் சென்ற வாகனத்தையும், கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள், மதிமுக தலைவர்கள் சென்ற வாகனத்தையும் வழி மறித்து சோதனை நடத்தினர்.பறக்கும் படை அதிகாரிகளிடம் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகே வாகனங்களை அங்கிருந்து விடுவித்தனர். திமுக கூட்டணியின் பிரச்சாரத்தை, தேர்தல் பணிகளை திட்டமிட்டு முடக்குவதற்காகவே சோதனை என்ற பெயரில் அடிக்கடி இடையூறுகள் செய்வதாக தலைவர்கள் குற்றம்சாட்டினர். அதிலும் குறிப்பாக சிதம்பரம்(தனி) தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி மணிக் கணக்கில் சோதனை செய்வதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம், இம் மாவட்டத் தில் தினமும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அமைச்சர் எம்.சி.சம்பத், அக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை ஒரு முறைக்கூட நிறுத்தியதில்லை என்பது தேர் தல் ஆணையத்தின் நேர்மைக்கு சான்றாகும்.
ந.நி.