சிதம்பரம், ஏப். 1- சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்குகள் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கெண்டார். அப்போது அவர் பேசிய தாவது:- மத்திய அரசுக்கு சலாம் போடுகின்ற அரசாக தமிழக அரசு உள்ளது. தமிழகத்தில் 80 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்களிடம் ஆளுங்கட்சி கமிஷன் கேட்டதால் அவர்கள் ஆந்திரா, குஜராத் மாநிலங்களுக்கு சென்று விட்டனர். 90 ஆயிரம் கோடி ரூபாயை 23 தொழிலதிபர்கள் இந்தியாவில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய அரசு 5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி 2 லட்சம் கோடி வரி தள்ளுபடியும் செய்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் வறட்சி,புயல்,மழையில், சிக்கி வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.எனவே ஏழைகளின் குரல் விவசாயிகளின் குரல் மக்களவையில் ஒலிக்க விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் திருமாவளவன், திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
கடலூர்
பின்னர், கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடலூர் உழவர் சந்தையில் திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “நடைபெறும் தேர்தல் ஜனநாயகமா, பாசிசமா என்பதற்கு விடைக்காணும் தேர்தல். மதச்சார்பின்மையை பாதுகாக்கும் அரசா ஒற்றைத் தத்துவத்தை திணித்து நாட்டை ரத்தக்களறியாக்கும் அரசா என்பதை முடிவு செய்யும்” என்றார்.இயற்கை இடர்பாடு மிக்க கடலூர் மாவட்டமும், சோறு படைக்கும் சோழவள நாடும் பாலைவனமாகும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் லட்சக்கணக்கான கோடிகளை தமிழகத்திலிருந்து கொண்டு செல்ல திட்டமிடுகிறார்கள் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.