tamilnadu

img

புரோ கபடி அரையிறுதி ஆட்டங்கள் ஒரு பார்வை

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக பிரபலமாகி வரும் புரோ கபடி லீக் தொடரின் 7-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று இறுதி போட்டி நடைபெறுகிறது. புதனன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் தில்லி - பெங்களூரு, மும்பை - பெங்கால் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தில்லி, பெங்கால் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

முதல் அரையிறுதி
பெங்களூரு - தில்லி அணிகள் மோதிய முதலாவது அரையிறுதி ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. தில்லி அணி ஆல்ரவுண்டர் பணியில் கலக்கி ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தது. பெங்களூரு அணியோ வழக்கம் போலப் பவனை நம்பி களமிறங்கியது. ஆனால் பவனுக்குத் தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்த தில்லி அணி, அசத்தலான தடுப்பாட்டத்தின் மூலம் அவரை அதிக நேரம் பெஞ்சில் அமர வைத்தது. பவனுக்கு எதிரான வியூகம் மற்றும் துடிப்பான தடுப்பாட்டம் ஆகியவை மூலம் தில்லி அணி 44- 38 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை புரட்டியெடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதி 
2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - மும்பை அணிகள் மோதின. முதல் அரையிறுதி ஆட்டத்தை விட சற்று பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி நட்சத்திர வீரர் மனீந்தர் சிங் இல்லாமல் களமிறங்கியது. இருப்பினும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 2-வது பாதியில் கடைசி வரை முன்னிலை வகித்தது. ஆனால் கடைசிக் கட்டத்தில் ரைடு சென்ற மும்பை அணியின் அஜிங்க்யா 4 புள்ளிகளை கைப்பற்ற இரு அணிகளும் சரிசம புள்ளிகளிலிருந்தன. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருப்பினும் கடைசிக் கட்டத்தில் சாதுரியமாகச் செயல்பட்ட பெங்கால் அணி 37- 35 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு தோல்விக்கான காரணம்
தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தாமல் பவனை மட்டுமே நம்பியது. அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ரோஹித் சோபிக்காதது. ஒரே  ரைடில் அதிக புள்ளிகளைக் குவிக்க ஆசைப்பட்டு பவன் அதிக நேரம் பெஞ்சில் அமர்ந்தது. புள்ளிகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பெங்களூரு அணியை வீழ்த்துவதற்கு அமைக்கப்பட்ட வியூகத்தில் தில்லி வீரர்கள் கவனமாகச் செயல்பட்டு அசத்தியது ஆகியவை எல்லாம் பெங்களூரு அணியின் தோல்விக்கு உரமாக இருந்தது.  
மும்பை தோல்விக்கான காரணம்   
திறமையான வீரர்கள் இருந்தும் அசமந்தமாகச் செயல்பட்டது. ரைடு புள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் தடுப்பாட்ட புள்ளிகளை அதிகம் நம்பியது. பொறுப்பை உணராமல் விளையாடியது. மனீந்தர் சிங் இல்லையென்பதால் எளிதாக வென்றுவிடலாம் என நினைத்தது.  தில்லி பெங்கால் இறுதிப்போட்டி சனியன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.