நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குத்தகை பாக்கி, கடன் சுமை, ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை, முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் 16 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். மேலும் 22 ஆயிரம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மே மாதத்தின் தொடக்கத்தில், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் குழு, எஸ்பிஐ முதலீட்டுப் பிரிவின் அதிகாரிகளை சந்தித்தனர். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர் குழுவினர் ஜெட் ஏர்வேஸ்க்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில், 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, எபிஐ வங்கியின் முதலீட்டு அமைப்பான எஸ்பிஐ கேப்ஸ் -க்கு கடந்த வாரம் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்கள். இந்த மின்னஞ்சலில், ஜெட் ஏர்கிராஃப்ட் பராமரிப்பு பொறியாளர் நலவாரியச் சங்கம் மற்றும் இந்திய விமானிகளின் நலவாரியச் சங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், உங்களுக்கு எப்போது தேவையென்றாலும் உதவிட தயாராக இருப்பதாக, எஸ்பிஐ முதலீட்டு அமைப்பிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை இழந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி தில்லியிலுள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.