புதுதில்லி,செப்.6-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஷீலா ரஷீத் மீது, தில்லி காவல்துறையினர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஷீலா ரஷீத், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின்னர் காஷ்மீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
புதுதில்லியில் உள்ள திலக் மார்க் காவல்நிலையத்தில் வழக்குரைஞர் ஒருவர் அளித்திட்ட புகாரின் அடிப்படையில் ஷீலா ரஷீத்திற்கு எதிராக புதன் கிழமையன்று முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முதல் தகவல் அறிக்கையில் ஷீலா ரஷீத்திற்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ (மதம், இனம், பிறப்பிடம், இருப்பிடம், மொழி முதலானவற்றின் அடிப்படையில் பல்வேறு பிரிவினருக்கு இடையே பகைமையை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்துகொள்ளுதல்), மற்றும் 153 (கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, சிறப்புப் பிரிவுக்கு, புலனாய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
ஷீலா ரஷீத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 18 தேதி வாக்கில் பதிவேற்றம் செய்திருந்த விவரங்கள் புகாரில் இடம் பெற்றிருக்கின்றன.
(ந.நி.)