ஜெய்ப்பூர்:
நீதி வழங்குவதில் அவசரம் காட்டமுடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரை,வெள்ளியன்று காலை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுண்டர் தொடர்பாகராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த புதிய கட்டிட திறப்புவிழா நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது. நீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அப்படி அதுபழிதீர்ப்பதாக அமைந்து விட்டால், நீதி தனது உண்மையான தன்மையைஇழந்து விடும். வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர நீதி அமைப்பில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் மத்தியஸ்தம் போன்ற மாற்று முறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது.நீதி அமைப்பில் உள்ள தாமதங்கள் வழக்குத் தொடுப்பவர்களுக்கு ஒரு தடையாகக் காணப்படுகின்றன. நீதித்துறை மற்றும் வழக்கு பற்றிய மாறிவரும் கருத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். வழக்கு முடிவதற்கு எடுக்கப்பட்ட கால அளவு ஒரு பெரிய தடையாகும் என்று அவர் பேசினார்.ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற புதிய கட்டிடதிறப்பு விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் கலந்து கொண்டிருந்தார்.
என்கவுண்ட்டருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கருதப்படும் நான்கு குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்த தெலுங்கானா காவல் துறை அதிகாரிகளின் மீது (FIR) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜி.எஸ். மணி மற்றும் பிரதீப் குமார் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.என்கவுண்ட்டர் தொடர்பாக 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சில விதிமுறைகளை விதிக்கப்பட்பன. அந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்றும் வழக்கு தொடர்ந்தஉச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஹைதராபாத் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் இறந்தவர்களின் சடலங்களை டிசம்பர் 9ம் தேதி, இரவு 8 மணி வரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டுமென தெலுங்கானா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்த சடலங்களின் பிரேத பரிசோதனையின் காணொளி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.இந்த என்கவுண்ட்டர் சம்பவம், சட்டத்திற்கு புறம்பான கொலை என பெண்கள் குழு ஒன்றும், சமூக உரிமை செயற்பாட்டாளர்களும் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்தபின்னர், இந்த உத்தரவை தெலுங்கானா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.