tamilnadu

img

மே மாதத்திற்கான  ஜிஎஸ்டி வருவாய் குறையும்..

புதுதில்லி:
மே மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியை எட்டாது என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி-யின் கீழ் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்க அப்போது இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் வரி வசூல் இலக்கை அடையும் அளவுக்கு இல்லை. சென்ற ஏப்ரல் மாதத்தில்தான் ரூ. 1.13 லட்சம் கோடி அளவிற்கு வசூல் இருந்தது. ஆண்டுக் கணக்கு முடிவு காரணமாகவே ஏப்ரல் மாதத்துக்கான வசூல் அதிகமாக இருந்தது.

தற்போது 2019 - 2020 நிதியாண்டில் ஜிஎஸ்டி-யின் கீழ் ரூ. 7.61 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதத்துக்கான வரி வசூல் ரூ. 1 லட்சம் கோடியை விடக் குறைவாகவே இருக்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் மணி கண்ட்ரோல் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி நடைமுறையில் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாலும், நிலையான வரி விதிப்பு முறை இன்னும் ஏற்படாமல் இருப்பதாலும் வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.