சென்னை,மார்ச் 6- சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 872 உயர்ந்து ரூ. 33 ஆயிரத்து 848-க்கும், கிராமுக்கு ரூ. 109 உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 231-க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் வர்த்தகத்தை பாதித்து வருகிறது. பங்குச் சந்தைகளில் பாதுகாப்பு கருதி முதலீட்டா ளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு பவுன் விலை ரூ. 31 ஆயிரத்தை தாண்டியது. பிறகு படிப்படியாக உயர்ந்து கடந்த 22ஆம் தேதி பவுன் ரூ. 32 ஆயிரத்தையும், 24ஆம் தேதி ரூ. 33 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்தது. அதன்பிறகு விலை சற்று குறைந்தது. பின்னர் மீண்டும் உயர்வதும், குறைவது மாக இருந்து வந்தது. திடீரென ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 1,024 உயர்ந்து ரூ. 33 ஆயிரத்து 224-க்கு விற்பனையானது.
சென்னையில் வியாழக்கிழமை ஒரு பவுன் ரூ. 32 ஆயிரத்து 976-க்கும், ஒரு கிராம் ரூ. 4,122-க்கும் விற்பனையானது. வெள்ளியன்று (மார்ச் 6) பவுனுக்கு ரூ. 872 உயர்ந்து ரூ. 33 ஆயிரத்து 848-க்கும், கிராமுக்கு ரூ. 109 உயர்ந்து ரூ. 4 ஆயிரத்து 231-க்கும் விற்பனையானது. தங்கம் விலை உயரும் போது வெள்ளி விலையும் உயர்வது வழக்கம். அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ. 50.70-க்கும், ஒரு கிலோ ரூ. 50 ஆயிரத்து 700-க்கும் விற்பனையானது. தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டி இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பீதி நிலவுவதால் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என நகை வியாபாரிகளும், சந்தை நிபுணர்களும் கூறியுள்ளனர்.