இந்திய ரயில்வேயின் 205 திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், இத்திட்டங்களுக்கான செலவு கூடுதலாக ரூ.2.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமல்படுத்தல் அமைச்சகம் (எம்.ஓ.எஸ்.பி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வேயின் 205 திட்டங்களுக்கான செலவு ரூ.2.21 லட்சம் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், செலவின அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எம்.ஓ.எஸ்.பி.ஐ., ரூ.150 கோடிக்கு மேல் செலவினங்கள் அதிகரிக்கும் அரசு திட்டங்களை கண்காணித்து வருகிறது. அதன்படி 205 ரயில்வே திட்டங்களின் மொத்த செலவு டிசம்பர் 2018 நிலவரப்படி ரூ.1.68 லட்சம் கோடி. ஆனால், இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மொத்த செலவு ரூ.3.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 131.84 சதவீத உயர்வாகும். இதன் மூலம் அரசுக்கு ரூ.2.21 லட்சம் கோடி நஷ்டம் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல், செலவினங்கள் அதிகரிப்பில் ரயில்வே துறைக்கு அடுத்து இரண்டாவதாக மின்சாரத் துறை உள்ளது. மின்சாரத்துறையில் 40 திட்டங்களுக்கான செலவு ரூ.63,334 கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, மூன்றாவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் உள்ளது. இதில், 49 திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இதற்கான செலவு ரூ.15,000.6 கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.