1960 - உலக வரலாற்றில் 5 நாட்கள் மட்டுமே இருந்த நாடான, (ஸ்டேட் ஆஃப்)சோமாலிலேண்ட் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெற்று உருவானது. இந்த 5 நாட்களுக்குள், 35 உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றாலும், இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த வடக்குப்பகுதியான இது, இத்தாலியின் காப்பாட்சியிலிருந்த தெற்குப் பகுதி ஜூலை 1இல் விடுதலைப்பெற்றவுடன் இணைந்து, சோமாலியா கூட்டாட்சிக் குடியரசு என்று தற்போதைய சோமாலியா நாடாக மாறியது. பழைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள்(தோன்றிய காலத்திலிருந்தே!) வசித்த பகுதியான, ஆஃப்ரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் பகுதியைச் சேர்ந்த சோமாலியா, ஆஃப்ரிக்க நாடுகளிலேயே மிக நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டிருந்ததால், வணிகத்தில் செழிப்புற்றே விளங்கியது. நபியின் முதல் ஹெஜிரா பயணத்தின்போது(கி.பி.622) இப்பகுதியில் இஸ்லாம் பரவியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாடுகளிடையே நடைபெற்ற ஆஃப்ரிக்காவுக்கான போட்டியில்(ஸ்க்ராம்பிள் ஃபார் ஆஃப்ரிக்கா), இங்கிலாந்து, இத்தாலி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் சோமாலியப் பகுதிகள் சென்றன.
வணிக மையமாகவே இதனைக் கையாண்ட இரு நாடுகளும், பிற குடியேற்ற நாடுகளில் செய்ததைப்போன்ற முதலீடுகள் செய்யவோ, தொழில்களை வளர்க்கவோ இல்லை. இரண்டாம் உலகப்போரில் இத்தாலியின் தோல்வியால், இரு பகுதிகளும் இங்கிலாந்தில் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தன. 1945இல் நடைபெற்ற பாட்ஸ்டம் மாநாட்டில், முன்பு இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து சோமாலியப் பகுதிகளில், 10 ஆண்டுகளில் தனித்துச் செயல்படும் சூழலை உருவாக்கி, விடுதலையளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், இத்தாலியின் காப்பாட்சியை ஐநா நிறுவியது. இக் காலகட்டத்தில், மேற்கத்திய கல்வி உள்ளிட்டவை வழங்கப்பெற்று, இத்தாலியப் பகுதி முன்னேற்றம் அடைய, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் பின்தங்கிவிட்டன. இதனாலேயே, அப்பகுதியினருக்கு, ஒன்றிணைய வேண்டுமென்ற தேசிய உணர்வு மிகுந்திருந்து, விடுதலையடைந்ததும், கூட்டரசாக்கினாலும், முன்னேறியிருந்த அப்பகுதியினரின் ஆதிக்கம் உள்நாட்டுக் குழப்பங்களுக்கே வழிவகுத்தது. 1980களின் இறுதியில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப்பின், இப்பகுதி சோமாலிலேண்ட் குடியரசு என்ற பெயரில், விடுதலையடைந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டாலும், (ஒன்றுபட்ட) சோமாலியாவின் தன்னாட்சிப்பெற்ற பகுதியாகவே இன்றுவரை உலக நாடுகளால் ஏற்கப்பட்டிருக்கிறது. தொழில்மயமாகாமல், கால்நடை(குறிப்பாக ஒட்டகம் - உலகின் மொத்த ஒட்டகங்களில் பாதி இங்குதான் உள்ளன) வளர்ப்பிலேயே பெரும்பகுதி மக்கள் ஈடுபடுவது, பன்னாட்டு வணிகத்தின்மீதான வரிகளை மட்டுமே நம்பிய நிர்வாகம், தொடர்ந்து ஏற்படும் வறட்சி ஆகியவற்றால், 73 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கீழ் வாழும் நாடாக சோமாலியா மாறிப்போனது.
(படத்தில் - சோமாலியா பச்சை நிறத்திலும், அதற்குட்பட்ட வெளிர் பச்சையில் சோமாலிலேண்ட் குடியரசும் காட்டப்பட்டுள்ளன.)
===அறிவுக்கடல்===