1956 - முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட உயர்நிலை நிரலாக்க மொழியான ஃபோர்ட்ரான் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு கட்டளையையும் கணினி மொழியில்(மெஷின் லேங்வேஜ்), அதாவது இருமை(பைனரி) எண்களில் குறிப்பிடுபவை முதல்-தலைமுறை நிரலாக்க மொழிகள் என்றும், குறிப்பிட்ட வகை கணினி யின் கணினி மொழிக் கட்டளைகளோடு இணைக்கப்பட்டு, எழுத்து வடிவிலான கட்டளைகளால் இயக்கப்படும்வகை யில் உருவாக்கப்பட்டவை அசெம்ப்ளி லேங்வேஜஸ் அல்லது இரண்டாம்-தலைமுறை நிரலாக்க மொழிகள் என்றும், நிரல்-மொழி-மாற்றி(கம்ப்பைலர்) ஒன்றின்மூலம், எவ்வகைக் கணினியிலும் செயல்படும் வகையில் உருவாக்கப் பட்டவை மூன்றாம்-தலைமுறை அல்லது உயர்நிலை நிரலாக்க மொழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஃபோர்ட்ரானுக்கு முன்பே சில உயர்நிலை மொழிகள் உருவாக்கப் பட்டிருந்தாலும்கூட, கணினியை இயக்குபவர்கள் ஒவ்வொரு முறையும் அதனை கணினிக்குப் புரியும் குறியீடுகளாக மாற்றவேண்டியிருந்ததால், அவை பெருமளவிலான பயன்பாட்டுக்கு வரவேயில்லை. ஒரு கம்ப்பைலரும் உடன் வழங்கப்பட்டு, அனைத்துவகை கணினிகளிலும் இயங்கும்வகையில் உருவான முதல் மொழி ஃபோர்ட்ரான்தான். ஆனால், நிரலாக்கத்தின் வரலாறு கணினிகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது! பிரெஞ்ச் நெசவாளரும் வணிகருமான ஜோசப் ஜேக்வார்ட், துளையிடப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி, அடவுகளுடன் (டிசைன்) துணி நெய்வதற்கு உருவாக்கியிருந்த, நீராவியால் இயங்கும் எந்திரமே, முதன்முதலில் ஒரு நிரலைப் பயன்படுத்திய எந்திரமாகும். சார்லஸ் பாபேஜின் வித்தியாசப்பொறியைப் பற்றி, இத்தாலிய கணிதவியலாளர் லூகி மெனாப்ரீ எழுதிய குறிப்புகளை 1842இல் மொழிபெயர்த்த ஆங்கில பெண் கணிதவியலாளர் அடா லவ்லேஸ், பெர்னவ்லி எண்களைக் கணக்கிட எழுதிய முறையே உலகின் முதல் கணினி நிரலாக ஏற்கப்பட்டுள்ளது. அதனால், உலகின் முதல் நிரலர்(ப்ரோக்ராமர்) ஒரு பெண்தான்! ஐபிஎம் 704 மெயின்ஃப்ரேம் கணினியில் பயன்படுத்துவதற்காக, ஜான் பேக்கஸ் என்பவர் தலைமையிலான குழுவினர் 1954இல் ஃபோட்ரானை உருவாக்கினர். கணிதச் சூத்திரங்களை (கணினிக்குப் புரியும் மொழியில்!) மொழிபெயர்ப்பதற்கான மொழி என்பதால் ஃபார்முலா ட்ரான்ஸ்லேஷன் என்பதிலிருந்து ஃபோர்ட்ரான் என்று பெயரிடப்பட்டது. ஃபோட்ரான் 77வரை, இம்மொழியில் பெரிய(கேப்பிட்டல்) எழுத்துகள் மட்டுமே பயன்படுத்த முடிந்ததால், ஃபோர்ட்ரான் என்பதும் பெரிய எழுத்துகளிலேயே குறிப்பிடப்பட்டது. மிகவேகமாக வளர்ந்த கணினித்துறையுடன், நிரலாக்க மொழிகளும் வளர்ந்து, அதிக மொழிகள் பேசப்படும் நாடுகளுடன் ஒப்பிட்டால், (பப்புவா நியூ கினியா 836, இந்தோனேஷியா 700க்கும் மேல், ஆகியவற்றுக்கு அடுத்து, 698 மொழிகளுடன்) மூன்றாமிடத்தில் கணினி மொழிகள் உள்ளன. ஆனாலும், அதிக செயல்திறன் கணினிப் பணி களுக்கும், உலகின் மிகவேகமான சூப்பர்கம்ப்யூட்டர்களின் தரத்தை மதிப்பிடுவதிலும் அறுபதாண்டுகள் கடந்த ஃபோர்ட்ரான் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.