tamilnadu

img

மிகவும் செயல்திறன்வாய்ந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், மிகவும் அபாயகரமானதும் கூட  -ஹர்ஷ் மந்தர்

கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், இந்தியா மாறிக்கொண்டே இருக்கிறது. தெருக்களில், பணியிடங்களில், குடும்ப உறுப்பினர்களுடனான உரையாடல்களில், நாடாளுமன்றத்தில், இணைய வெளியில், ஊடகத்தில் என எங்கெங்கும் இந்த மாற்றத்தை உங்களால் உணர முடியும். ஒரு புதிய மூர்க்கத்தனமான கற்பனையின் அடிப்படையில் நாடு உக்கிரத்துடன மாற்றியமைக்கப்படுவதைக் காணமுடியும். நம்மில் சிலர் (இந்த மாற்றத்தை) மிகுந்த கவலையுடன், அச்சத்துடன் நோக்குகிறோம்; வேறு பலர் வெற்றிக்களிப்பின் பரவச நிலையில் பார்க்கின்றனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டிய விழுமியங்களைத் தழுவியும், தனது அரசமைப்புச்  சட்டத்தின் முழுமையாக வென்றெடுக்கப்படாத உறுதிமொழிகள், உத்தரவாதங்கள் மீதும் உருவகப்படுத்தட்ட மற்றொரு இந்தியா நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது. அத்தகைய இந்தியாவைப் பாதுகாக்க உறுதியாக நிற்பதற்கு ஒரு சிலரே தயாராகத் இருப்பதாகத் தோன்றுகிறது. கருணை, அறநெறி ஆகியவை குறித்து கவலைப்படாத மக்களாக வெகு வேகமாக மாறி வருகிறோம்.

 நரேந்திர மோடி - அமித் ஷா தலைமை 2019 மே மாதத்தில் தாங்கள் பெற்ற விரிவடைந்த அங்கீகாரத்தை, இந்தியாவை, பெரும்பான்மைவாத, சர்வாதிகார, ராணுவமயப்படுத்தப்பட்ட, நீதி, நெறிகள் அற்ற  இந்து நாடாக மறுகட்டமைப்பு செய்ய அளிக்கப்பட்டதாகவே பார்க்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இத்தகயை திட்டத்தின் பெரும் பகுதி, மோடி-1இன் ஆட்சிக்காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியாவின் ஜனநாயக அரசமைப்பு சட்டத்தின் கட்டமைப்பு இதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே, அரசமைப்புச் சட்டத்தை, திருட்டுத்தளமாக அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயக அமைப்புகளை, ஜனநாயக நடைமுறைகளை உள்ளிருந்த படியே இடைவிடாது அரிக்கும் வேலை நடைபெற்றது. இது, அச்சம் மிகுந்த சூழலை அன்றாட நிகழ்வாக வளர்த்தெடுப்பது, பொதுவெளியில் வெறுப்புணர்வை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் செயல்பட்டது.

ஆனால், மே மாத தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மோடி – அமித் ஷா ஆட்சி மேற்கண்ட பாசாங்குகளை எல்லாம் மூர்க்கத்தனமாகத் தள்ளி வைத்துவிட்டது. இந்தியாவின் இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு, தங்களது கற்பனையில் உள்ள நாட்டிற்கு மூன்று மிகப் பெரும் எதிரிகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அறநெறி, நாட்டின் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினர், எதிர்க்குரல் எழுப்பும் இடதுசாரி மற்றும் தாராளவாதிகள். இந்த மூன்று எதிரிகளுக்கும் எதிரான, வெளிப்படையான (அரசின்) போர் அறைகூவலுக்கு நாம் சாட்சிகளாக உள்ளோம்.

மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் இத்தகைய புதிய உணர்வு நிலையின் ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டன. 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கம், நாடாளுமன்றக் கட்டடிடத்திலிருந்து மிக விரைவாக தெருக்களுக்கு, கும்பல் கொலைகளுக்கான அழைப்பாக விரைந்து பரவியது. (இத்தகையை கும்பல் கொலைகள்) பசுப் பாதுகாப்புக்கு என இனியும் பாசாங்கு செய்ய அவர்களுக்குத் தேவை இருக்கவில்லை.

தேசிய குடிமக்கள் பதிவேடு முறை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படுப்பட்டு, 'ஊடுருவல்காரர்கள்' நாட்டின் ஒவ்வொரு அங்குல இடத்திலிருந்தும் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறினார். இதை, கும்பலைத் திருப்திப்படுத்தக் கூறப்படும் வெற்று எச்சரிக்கையாகக் கருதுவது மிகப் பெரும் தவறாக அமையும். அதுவும், மோடி – அமித் ஷா தலைைமையில் இதை அவ்வாறு கருத முடியாது. தான் உள்துறை அமைச்சராக பதவியேற்ற முதல் நாளிலேயே. மாநில ்அரசுகள், ஏன் மாவட்ட ஆட்சியர்களே வெளிநாட்டவர் நடுவர் மன்றங்களை நிறுவிக்கொள்ள வகை செய்யும் ஆணையைப் பிறப்பித்தார். மேலும், கண்டறியப்பட்ட வெளிநாட்டினரை அடைத்து வைப்பதற்கான கொட்டடிகளையும் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த அரசின் மொழியில் 'ஊடுருவல்காரர்கள்' என்பது உரிய ஆவணங்கள் இன்றி இருக்கும் முஸ்லிம்களையே குறிக்கும். ஏனெனில், ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் இந்துக்களாகவோ அல்லது வேறு மதக் குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால் அவர்கள் அகதிகள். அவர்களுக்கு, குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை சட்டத்தை திருத்துவதாக பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறது. 

இந்த நடவடிக்கை, இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டத்துக்கு, இறுதியான, மரண அடியாகும். ஏறத்தாழ 18 கோடி முஸ்லிம்கள் அல்லது அதில் ஒரு சிறு பகுதியினரை, அவர்கள் 1950களில் இருந்து குடிமக்களாக இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் எனக் கூறப்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள். ஓர் அரசு தனது சிறுபான்மையின மக்களை, நாடற்றவர்களாக மாற்றுவேன் என அச்சுறுத்துவதன் மூலம் அவர்களுக்கு உருவாக்கும் மாபெரும் துன்பத்தை, அசாமில் நாம் கண்டோம். இது படிப்படியாக மற்ற நாட்டின் மற்ற பகுதிகளுக்கு - முதலில் எல்லையில் உள்ள  மேற்கு வங்க மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி, நாட்டின் மாநகரங்கள் வரை விரிவுபடுத்தப்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள். இது ஏதோ நீண்ட தொலைவில் உள்ள கொடுமைகள் நிறைந்த கற்பனையான எதிர்காலம் அல்ல. காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட அரசியல் சட்டக் கவிழ்ப்புக்குப் பிறகு, எதுவும் நிகழக்கூடும்.

கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிகமான சட்டமுன்வடிவுகள், சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் மூலம், (கடைசியாக நடைபெற்ற) நாடாளுமன்ற கூட்டத்தொடர்தான்  மிகவும் செயல்திறன் மிகுந்த தொடர் என நமக்கு கூறப்படுகிறது. ஆனால், மோடி – அமித் ஷாவின் நிகழ்ச்சி நிரலைப் படிப்படியாக முன்னெடுத்துச் செல்வதில்தான் செயல்திறன் மிக்கதாக இருந்தது. (இந்த தொடரில்) தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை சாரமற்றதாகவும், அரைத்தமாவையே அரைத்ததாகவும் இருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த வரவு - செலவு கணக்கு கூட நேர் செய்யப்படாததாக இருந்தது. ஆனால், நம்பகமற்ற தரவுகள், பொருளாதார வளர்ச்சி - வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை முடக்கும் காரணிகள் குறித்து இந்த அரசுக்குக் கவலை இல்லை. அவர்களுக்குப் பெருகி வரும், விசுவாசமான தேர்தல் ஆதரவு தளம் வேறு அடிப்படைகளைக் கொண்டது. அது, இந்த அரசின், தீர்மானகரமான, மக்களைப் பிளவு படுத்தக்கூடிய, பெரும்பான்மைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதைச் சார்ந்திருக்கிறது. 

எதிர்க்கட்சிகள், கைகோர்த்து நின்றிருந்தால், இந்த மாபெரும் அழிவு சக்தியை தடுத்து நிறுத்தியிருக் முடியும். ஆனால், அவர்கள் பல்வேறு வகையில் குழம்பியவர்களாக இருந்தனர்; மாபெரும் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட செயலற்ற தன்மையில் இருந்து அவர்கள் மீண்டிருக்கவில்லை; கருத்தியல்ரீதியாக உள்ளீடற்றவர்களாக, சந்தர்ப்பவாதம் மிக்கவர்களாக அல்லது அச்சுறுத்தலுக்கும், ஆசைகாட்டலுக்கும் அடிபணிபவர்களாக இருந்தனர்.

எனவே, தனது பல நிகழ்ச்சி நிரல்களை நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே  மத்திய அரசால் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. தனி நபர்களின் கருத்து மாறுபாட்டை நசுக்க, இதுவரை சட்டங்களில் இருந்தவற்றிலேயே மிகவும் கடுமையானதான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத் திருத்தம் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தம், அமைப்புகளை மட்டுமன்றி, தனி நபர்களையும் பயங்கரவாதிகளாக அறிவிக்க வகை செய்கிறது. இந்த அரசு செய்பவற்றுக்கு எதிரான, கொள்கை அடிப்படையிலான நிலையை எடுக்கும் நாம் ஒவ்வொருவரையும், பயங்கரவாதிகளாக - அது நகர்ப்பற நக்சலாகவோ, ஜிகாதியாகவோ இருக்கலாம் - அறிவிக்கப்படக்கூடிய எளிய இலக்காக இந்த திருத்தம் மாற்றுகிறது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் கவனமாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிட்டது. தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், எந்த அரசாங்கத்தை  அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளச் செய்ய வேண்டுமோ, அந்த அரசாங்கத்தின் விருப்பத்தை சார்ந்ததாக மாற்றப்பட்டுவிட்டது.  முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டமுன்வடிவும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்படாமல், சட்டமாக்கப்பட்டுவிட்டது. அதுவும், மற்ற மதங்களைச் சேர்ந்த, கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களின் நிலை குறித்து, எவ்விதக் கரிசனமும் இல்லாத நிலையில், இஸ்லாமிய கணவர்களை மட்டும் கிரிமினல் குற்றவாளியாக்குவது குறித்து எதிர்ப்புகள் இருந்த நிலையிலும் இது சட்டமாக்கப்பட்டது. 

ஆனால், என்ன விலை கொடுத்தேனும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக - ஆளும் வர்க்கத்தின் மைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றித் தீர்வது, மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிவது, என்ற மோடி – அமித் ஷா அரசின் தீர்மானகரமான நிலைப்பாட்டின் தெளிவான சமிக்ஞையாக அமைந்தது ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு நிலையை முடிவுக்கு கொணடுவந்தது; அதுவும், வெறுமனே குடியரசுத் தலைவரின் ஓர் ஆணையின் மூலம், இந்தியாவிற்கு ஆதரவான அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் கைது செய்த பின்னர் செய்யப்பட்டதைக் கவனிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தரம் குறைத்து, இரு யூனியன் பிரதேசதங்களாக பிரித்ததும் இதையே காட்டுகிறது.

இதைப் போன்ற அபாயகரமான, கண்மூடித்தனமான, மூர்க்கத்தனமான, ஜனநாயகத்துக்கு - அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையை, காஷ்மீர் மக்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைத்து வைத்திருந்த மிக மெல்லிய பிணைப்பையும் அறுத்து எறிவது குறித்து கவலை எதுவுமின்றி, பரவலான பொதுமக்களின் கொண்டாட்டத்திற்கிடையே மேற்கொண்டது, தற்போது எதுவும் சாத்தியமே என்பதையும்,  இந்தியா எப்படியிருக்க வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ்.சின் பார்வையை முன்னெடுத்து்ச் செல்லவும் முடியும் என்பதையும் உணர்த்துகிறது. தன்னுடைய காலம் வந்துவிட்டது என ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. 

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை; இந்தியாவின் பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வண்ணங்களைக் கொண்டிருந்ததாலேயே, தேசியக் கொடியைக் கூட அது தொடக்கத்தில் நிராகரித்தது என்பதை நினைவில் கொள்வது இங்கு பொருத்தமானதாக இருக்கும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் மிக அடிப்படையான நிகழ்ச்சி நிரலில், இந்தியாவின் ஒரே ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை மாநிலத்தின் (ஜம்மு-காஷ்மீர்) சிறப்பு  நிலையை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனுடன் கூட, ஒரு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதும் அதன் முன்னுரிமைகளில் ஒன்று. இதற்கான முக்கியமான படிதான் முத்தலாக் சட்டம்; மேலும், பல சட்டங்கள் வரலாம். மூன்றாவது முக்கிய குறிக்கோள், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது. இது தொடர்பாகவும் நாம் தீர்மானகரமான நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். 

இவற்றுடன் கூட, நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு; ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்கு கடப்பாடுடைய அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நேரடியாக அரசின் மேல்நிலை பொறுப்புகளில்  நியமிக்கப்படுவது; பல்கலைக்கழகங்கள் பல்வேறு பட்ட சிந்தனைகளை செழித்து வளரும், மாற்று கருத்துகளை அச்சமின்றி முன் வைக்கும் வெளி என்பதை நிர்மூலமாக்குவது; வெறுப்பு வன்முறையை மேலும் இயல்பாக்குவது ஆகியவை அனைத்தும் ஒருங்கிணைவது என்பது நாம் அறிந்து வைத்திருக்கும் இந்தியாவின் முடிவு என்பதையே குறிக்கும். 

அரசமைப்பு சட்டம், இஸ்லாமிய-கிறித்தவ சிறுபான்மையினர், மாற்று கருத்தாளர்கள் ஆகியோருக்கு எதிரான போர் என்பது மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில், கொரில்லா யுத்தம் போன்ற மறைமுகத் தாக்குதலாகவே இருந்தது. ஆனால் இன்று, உள்துறை அமைச்சராக அமித் ஷா மோடி அருகில் இருக்கும் போது, அது வெளிப்படையான உள்நாட்டு யுத்தமாக மாறிவிட்டது. இந்தியாவின், பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒருங்கிணைந்து, எதிர்த்து போராட மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு, எதிர்த்துப் போராடவில்லை எனில், ஒட்டு மொத்த இந்திய அரசியல் வர்க்கத்தையும் வரலாறு மன்னிக்காது. 

அது எவ்வாறு இருப்பினும், இந்திய மக்கள் எதிர்த்துப் போராடுவார்கள். இல்லாவிடில் அவர்களுக்கு இழப்புகள் அதிகம். முக்கியமாக, நாம் அனைரும் சமமாக வாழக்கூடிய, அச்சமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய, கண்ணியம், நீதி, கருணை மற்றும் அறநெறிகள் இன்னமும் தழைக்கக்கூடிய நாடு என்ற கருத்தாக்கம்  இன்றும் முழுமையாக பட்டுப்போகாமல் இருக்கிறது, (தற்போதும்) தாக்குப் பிடிக்கிறது; ஒரு நாள் வெற்றியும் பெறும். 

(நன்றி: ‘தி ஒயர்’ இணைய இதழ்)

(தமிழில்: தஞ்சை ரமேஷ்)