1820 - மின்சாரத்திற்கும், காந்தப்புலத்திற்குமான தொடர்பை, டென்மார்க் இயற்பியலாளரும், வேதியியலாளருமான ஹேன்ஸ் ஆர்ஸ்ட்டெட் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பே மின்காந்தவியல் என்ற துறையின் உருவாக்கத்திற்கும், மின்காந்தப் புலத்தின்மூலம் இயங்கும் மின்மோட்டார்கள், எந்திர சக்தியை மின்சக்தியாக மாற்றும் ஜெனரேட்டர்கள், மின்காந்தத் தூண்டலில் இயங்கும் பிற கருவிகள் ஆகியவற்றிற்கான அடிப்படையாகும். மின்கலத்திலிருந்து(பேட்டரி) மின்சாரம் செல்லும் ஒயருக்கு அருகிலிருந்த திசைகாட்டியின் முள், வடதிசையிலிருந்து விலகியிருந்ததையும், மின்சாரத்தைத் துண்டித்தவுடன் அது சரியானதையும் கவனித்த ஆர்ஸ்ட்டெட், மின்சாரம் பாயும் கம்பியைச் சுற்றிலும் காந்தப்புலம் உருவாகிறது என்று கண்டுபிடித்தார். கம்பியில் பாயும் மின்சாரத்தின் அளவு, திசை ஆகியவற்றுக்கும், உருவாகும் காந்தப்புலத்திற்குமான தொடர்பை வரையறுக்கும் ஆர்ஸ்ட்டெட் விதியையும் உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பை அறிந்த ஆம்ப்பியர், இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று மின்னியக்க விசையியலின் கோட்பாட்டினை உருவாக்கினார்.
பின்னாளில் மேக்ஸ்வெல், ஃபாரடே ஆகியோரின் ஆய்வுகளிலும் இக்கண்டுபிடிப்பு முக்கியப்பங்கு வகித்தது. புவியில் அறியப்பட்டுள்ள நான்கு அடிப்படை விசைகளில், மின்காந்தப்புலமும் ஒன்றாகும். ஆர்ஸ்ட்டெட்டின் இந்தக் கண்டுபிடிப்பிற்காக அவரைக் கவுரவிக்க, சிஜிஎஸ்(செண்டிமீட்டர், கிராம், செகண்ட்) அளவை முறையில், மின்காந்தத் தூண்டலுக்கான அலகு அவரது பெயரால் அழைக்கப்பட்டது. வேதியியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ள ஆர்ஸ்ட்டெட்தான், முதன்முதலில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவரும் ஆவார். ஓர் ஆய்வின் படிநிலைகளைச் சிந்தனைமூலம் பரிசீலிக்கும் சிந்திக்கும் ஆய்வு(தாட் எக்ஸ்பெரிமெண்ட்) என்ற துறையிலும் பங்களிப்புச் செய்துள்ள ஆர்ஸ்ட்டெதான், அதன் ஜெர்மன் மொழிப் பெயரான கெடான்எக்ஸ்பெரிமெண்ட் என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கிப் பயன்படுத்தினார். டென்மார்க்கின் பல கல்வி நிலையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், டென்மார்க்கின் முதல் துணைக்கோளும் இவரது பெயராலேயே அழைக்கப்பட்டது. அமெரிக்க இயற்பியல் ஆசிரியர்களின் சங்கம், சிறந்த இயற்பியல் ஆசிரியர்களுக்கு ஆர்ஸ்ட்டெட் பதக்கம் வழங்குகிறது. டென்மார்க்கில் சிறந்த அறிவியலாளர்களுக்கு ஆர்ஸ்ட்டெட் பதக்கம் வழங்கப்படுகிறது. ஆர்ஸ்ட்டெட்டின் இளைய சகோதரரான ஆண்டர்ஸ் ஆர்ஸ்ட்டெட், டென்மார்க்கின் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவுக்கடல்