ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வேலையை பிரேசிலில் உள்ள ஜெய்ர் போல்சோனரோ தலைமையிலான வலதுசாரி அரசு செய்திருக்கிறது. இந்த மாங்காய்கள் அனைத்தும் பிரேசிலின் பெரு முதலாளிகளின் வசூல் பெட்டகங்களை நிரப்பவிருக்கின்றன. கடந்த ஆண்டில் பிரேசில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. துவக்கமே சர்ச்சைகளோடுதான் அமைந்தது. அந்நாட்டு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி லூலாமீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிறையில் அடைத்து, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அவரை விலக்கி வைப்பதில் வலதுசாரிகள் வெற்றியடைந்தனர். இதனால், சமூக தாராளவாதக் கட்சியின் சார்பில்போட்டியிட்ட ஜெய்ர் போல்சோனரோ ஜனாதிபதித் தேர்தலில் 55 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். லூலா போட்டியிட முடியாமல் போனதால் ஏற்பட்டகுழப்பமே இவருடைய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
துவக்கமே துயரம்
வக்கமே துயரம்2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று போல்சோனரோ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தனது அமைச்சரவையை அமைக்கையிலேயே பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தை நீக்கினார். அவர்களின் நிலங்களை அடையாளம் காணும் பணி நடந்து கொண்டிருந்தது. அமைச்சகமே இல்லாத நிலையில் அந்தப் பணி நிறுத்தப்பட்டது. பழங்குடி மக்களின் அடையாளங்களைத் துடைத்தெறியும் பணியை போல்சோனரோ தலைமையிலான அரசு செய்து விடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பழங்குடி மக்கள் பகுதிகளில் சுதந்திரமாக இயற்கை வளங்களைப் பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கவே இது உதவும் என்கிறார்கள் இடதுசாரிகள்.அடுத்த கட்டமாக, அதிதீவிர வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினார். பெரு முதலாளிகளின் வரிக்குறைப்புக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், அதைச் சரிக்கட்ட நடுத்தர வர்க்க மக்களின்வருமானத்தில் கைவைத்தார். குறிப்பாக,சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நீர்த்துப்போகும் வகையில் அறிவிப்புகள் வெளியாகின.குறிப்பாக, ஓய்வூதியத்திட்டத்தில் பெரும் மாறுதல்கள் உருவாக்கப்பட்டன. ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்டவைதனியார் வங்கிகளால் மேலாண்மை செய்யப்படும் என்று அரசு முன்மொழிந்துள்ளது. இதற்கான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள். பிரேசில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குஉறுப்பினர்களின் ஆதரவு இந்த மசோதாவை நிறைவேற்றத் தேவையானதாக இருக்கும். இந்தச் சட்டம் நிறைவேறினால், பிரேசிலின் ஓய்வூதியத்திட்டமே காணாமல் போய்விடும் ஆபத்து எழுந்துள்ளது.
கடும் எதிர்ப்பு
பிரேசிலில் பத்து பெரும் தொழிற்சங்கங்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளன. சமூகப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் போராட்டத்தின் தேசிய தினம்என்று ஏப்ரல் 16 அன்று இந்தத் தொழிற்சங்கங்கள் அனுசரித்தன. பிரேசிலின் முக்கியமான 126 நகரங்களில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. விரைவில் நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு இந்தப் போராட்டங்கள் இட்டுச் செல்லும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பெரு முதலாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போன்று அமைந்திருப்பதாக சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இடதுசாரிகளின் பின்னால் உழைப்பாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் திரளத் துவங்குவதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.