ஓசூர்:
கடந்த சில வாரங்களாகவே பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது நாட்டின் பொருளாதார மந்த நிலை, நெருக்கடி, வீழ்ச்சியாகும். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மோட்டார் வாகனத் தொழில். பல லட்சம் பேர் வேலையிழப்பால் மீளா துயரத்தில் உள்ள சிறு-குறு உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்கள் கூட உற்பத்தி நாட்களை குறைத்து வருகின்றன.
நாட்டில் சென்னை, ஓசூர், புனே, குர்கான் ஆகிய நான்கு நகரங்களும் மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி நகரங்களாகும். மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த பகுதிகளிலிருந்துதான் உதிரிபாகங்கள் செல்கின்றன.இந்த பகுதியின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கையும் இந்த தொழிலை நம்பித்தான் உள்ளது.
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் குறித்து ஓசூர் சிறு-குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் கே. வேல்முருகன், செயலாளர் ஆர்.வடிவேலு, பொருளாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோரிடம் கேட்டபோது, “என்றைக்கு பணமதிப்பு நீக்கம் செய்தார்
களோ அன்றைக்கு துவங்கிய சரிவிலிருந்து இன்னமும் தலை நிமிர முடியவில்லை. மத்திய-மாநில அரசுகள் கொண்டுவந்த ஜிஎஸ்டி வரியில் எங்கள் தொழில் அடியோடு நொடிந்துவிட்டது” என்றனர்,எங்களுக்கு ‘ரா’ மெட்டீரியல் (கச்சாப் பொருள்) வழங்கி வரும் யாமஹா, மாருதி சுசூகி, பஜாஜ் போன்ற பெரும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போதுதான் ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளை உணர்ந்துள்ளன. ஆயிரம் என்ஜின்களை கொள்முதல் செய்து வந்த பெரும் நிறுவனங்கள் தற்போது ஜாப் ஆர்டர்களை கேன்சல் செய்வதுடன், கொள்முதலை படிப்படியாக குறைத்து கச்சாப் பொருட்கள் வழங்குவதையும் நிறுத்தியதால் சிறு குறு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தள்ளாடி வருவதையும் சுட்டிக்காட்டினர்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
உதிரிபாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு விதித்துள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும். மிகக் குறைந்தஅளவே கிடைக்கும் வருவாயை முடக்கக் கூடிய லேபர் சார்ஜ் 18 விழுக்காடு வரியை 3 சதவீதமாக குறைக்கவேண்டும்.ரயில்வே, பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள், மாநிலஅரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து வகை மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியை சிறு-குறு நிறுவனங்களிடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மூன்று ஷிப்டும் தடையில்லாமல் ஆலையை இயக்க முடியும். இதை நம்பி வாழும் ஆட்டோ மொபைல் துறை குடும்பங்களையும் வாழ வைக்க முடியும். வாகனங்கள் வாங்கும்போது ஐந்து வருடத்திற்கு காப்பீட்டுத்தொகை வசூலிப்பதை ஒரு வருடமாக குறைத்து பழைய நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். வங்கிக்கடன் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு 90 நாட்கள் என்பதை 180 நாட்களாக உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.வாகனங்கள் வாங்கும் போது ரோடு டாக்ஸ் (சாலை வரி) வசூல் செய்து விடுகிறார்கள். பிறகு சுங்கவரி கட்டணம் ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இந்த பிரச்சனையில் அரசாங்கம் தலையிட்டு, சாலை வரி வசூலை ரத்து செய்தால் வாகனங்களின் விலையும் குறையும், வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மூலமே தொழில் முனைவோர் தொடர்ந்து தொழிலை நடத்த முடியும். இருளில் மூழ்கிக்கிடக்கும் மோட்டார் வாகன உற்பத்தி தொழில் வெளிச்சம் பெறும் என்றும் தெரிவித்தனர்.
சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில், “தமிழகத்தின் எல்லை, கர்நாட காவின் நுழைவுவாயில், பெங்களூரின் அருகாமை நகரம் ஓசூர். சுமார் மூன்று லட்சம் மக்கள் வசித்தாலும் இரண்டரை லட்சம் பேர் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தைச்சார்ந்தவர்கள். முழுக்க முழுக்கமோட்டார் வாகன உற்பத்தி தொழிலை நம்பியே இந் நகரில் குடியமர்ந்துள்ளனர். மிகப்பெரிய நிறுவனங்களான டிவிஎஸ், அசோக் லேலண்ட் நிறுவனங்கள் கார், லாரி, இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றன. இதுமட்டுமன்றி டைட்டன் போன்ற ஏராளமான தொழிற்சாலைகளும் இங்கு அமைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத்தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங் களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு-குறு தொழில்முனைவோர் தொழில் நடத்தி வருகிறார்கள்.
இந்த துறையில் ஏற்பட்ட நெருக்கடிகளை கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொழிற்சங்கங்களும், சிறு-குறுந் தொழில்முனைவோர் களும் பல முறை எடுத்துரைத்த போது பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை. தற்போதுதான் அவர்களும் வெளிப் கடையாக பேசுகிறார்கள்.இந்த நிறுவனங்கள் குறைந்த கூலிக்குவெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கில் தொழிலாளர்களை அழைத்து வந்தன. இவர்கள் அனைவரும் ஓசூர் பகுதியில் வாடகை வீடுகளில் குடியிருந்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள தேக்கநிலையை காரணம் காட்டி வேலை யிலிருந்து வெளியேற்றிவிட்டனர். வேறுவழியின்றி வாடகை வீடுகளை காலி செய்து குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் ஓசூர் நகரமேமயானமாகியுள்ளது. அந்த தொழி லாளிகளின் குடும்பங்கள் மட்டுமல்ல, ஓசூர் பகுதியின் வர்த்தகமும், வாடகை தாரர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
அது என்ன பிஎஸ்?
மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் பணியாற்றி வரும் இளம் பொறியாளர் ஒருவரிடம் பேசியபோது, “ஆட்டோ மொபைல் தொழில் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்)” என்றார்.உலகம் வெப்பமயமாதலிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், காற்று மாசுபடுவதற்கு காரணமான வாகன பயன்பாட்டில், மாசு உண்டாகாத வகையிலான என்ஜின்களை மட்டுமே பொருத்த வேண்டும்என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி, வேன், டிராக்டர் உற்பத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய டாட்டா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிவிஎஸ், ராயல் என்பீல்டு போன்றவை மட்டுமே இந்திய நிறுவனங்களாகும். மற்ற அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொரியா, ஜப்பான், தைவான், மலேசியா,சீனா நாடுகளை சார்ந்தவையாகும். எனவே, அவர்கள் உருவாக்கிய விதிமுறைகளை இங்கு செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்கட்டிருக்கிறோம். இதற்காகவே உருவாக்கப் பட்டதுதான் ‘பாரத் ஸ்டேஜ்’ என்கிற பிஎஸ் அமைப்பு.இந்தியாவில் 2016ஆம் ஆண்டில் முதன் முதலாக பிஎஸ்-3 விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அத்தகைய என்ஜின்களால் மாசு மேலும் அதிகரித்திருப்பதால் இதை 10 ஆண்டுகளுக்குள் குறைக்கவில்லை என்றால் நாட்டின் சுற்றுச்சூழல் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்றும் பயமுறுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பிஎஸ் -3 மாடல் விற்பனையை 2017 ஆம் ஆண்டில் தடை செய்தது. பிறகு, பிஎஸ்-4என்ஜின் பொருத்தப்பட்ட வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இதன் ஆயுட் காலம் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே செல்லும் என்றுநீதிமன்றம் கூறியது. அடுத்ததாக, பிஎஸ் -5 மாடலுக்கு செல்ல வேண்டிய ஐரோப்பிய ஒன்றியம், நேரடியாக பிஎஸ்-6-க்கு சென்றது. இதற்கு மோடிஅரசிடம் ‘சிக்னல்’ கிடைத்துவிட்டதால் வாகனங்களை உற்பத்தி செய்து வைத்திருக்கும் பெரும்நிறுவனங்கள் விலையை குறைக்க முன்வராமல்,உற்பத்தியை நிறுத்தி ஒப்பந்த, கூலித்தொழிலாளி களை வேலையிலிருந்து வெளியேற்றி வருவதையும் விரிவாக விளக்கினார்.
===ஒய்.சந்திரன், சி.ஸ்ரீராமுலு===