மாஸ்கோ
ஐரோப்பா கண்டத்தில் கொரோனாவால் அதிக சேதாரத்தைச் சந்தித்திருப்பது இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டும் தான். மற்ற நாடுகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்காத நிலையில், உலகில் மிகப்பெரிய நாடாக உள்ள ரஷ்யாவும் கொரோனவால் பலத்த பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
கடந்த மாதம் அந்நாட்டு மக்களுக்கு கொரோனா என்றால் என்னவென்று தெரியாது போல இருந்தனர். ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா பெயரைக் கேட்டாலே அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். காரணம் கொரோனா பாதிப்பு வேகம் தீவிரமடைந்துள்ளது தான்.
ரஷ்யாவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 361 பேர் பலியாகியுள்ள நிலையில், 3,291 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால் கடந்த 24 மணி நேரத்தில் 6000-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு, 48 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.